2015-06-30 17:09:00

போர்ப் பகுதிகளில் 34 மில்லியன் சிறாருக்கு கல்வி உதவி தேவை


ஜூன்,30,2015. போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலுள்ள 3 கோடியே 40 இலட்சம் சிறார் மற்றும் வளர்இளம் பருவத்தினரைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு 230 கோடி டாலர் தேவைப்படும், இந்தத் தொகை, மனிதாபிமான உதவிகளுக்கென பெறப்படும் தொகையைவிட பத்து மடங்கு அதிகம் என்று யுனெஸ்கோ வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

போர் இடம்பெறும் சூழல்களில் ஒரு சிறாரின் ஆரம்பக் கல்விக்கு மேலும் 38 டாலரும்,  ஒரு வளர்இளம் பருவத்தினரின் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கு 113 டாலரும் தேவைப்படுகின்றன என்று, உலகளாவிய கல்வி நிலையை மேற்பார்வையிடும் யுனெஸ்கோ இயக்குனர் Aaron Benavot அவர்கள் கூறினார்.

2000மாம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட எல்லாருக்கும் கல்வி என்ற இலக்கை மூன்றில் ஒரு பகுதி நாடுகளே எட்டியுள்ளன என்றும், இதற்கு போர்களே முக்கிய தடைகளாக உள்ளன என்றும் யுனெஸ்கோவின் அறிக்கை கூறுகிறது.  

மேலும், உலகில், குறிப்பாக, மத்திய கிழக்கில் கலாச்சாரப் பாரம்பரிய வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும்வேளை, அவற்றைப் பாதுகாப்பதற்கு பாரம்பரிய உலகளாவிய நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளது யுனெஸ்கோ. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.