2015-06-29 16:23:00

வாரம் ஓர் அலசல் – அனைத்தும் சாத்தியமே


ஜூன்,29,2015. முயற்சியின்றி கிடைத்த வெற்றி சில காலம்தான் நிலைத்திருக்கும். பயிற்சியின்றி கிடைத்த வெற்றியும் காலத்தால் அழிந்துவிடும். முயற்சியும் பயிற்சியும் உள்ள வெற்றி ஆயுள்வரை நிலைத்திருக்கும்..! இப்படியொரு கவிதையை இணையத்தில் வாசித்தபோது, திருச்சியில் ஒரு தாயின் விடா முயற்சி, அவரின் ஆட்டிசம் நோயாளி மகனை எப்படி வாழ வைத்து வருகிறது என்பதை உணர முடிந்தது. சுரேஷ்குமார் கால் டாக்ஸி ஓட்டுநர். இவரும், இவரது மனைவி நிலாவும் திருச்சியில் ஒரு வாடகை வீட்டில் அமைதியாக குடும்ப வாழ்வை நடத்திக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததும் அய்யப்பன் என்று பெயரிட்டு அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அம்மகிழ்ச்சி சிறிது மாதங்கள்கூட நீடிக்கவில்லை. ஏனெனில் வளர்ந்து வந்த அய்யப்பன், தாயின் முகம் பார்ப்பது, சிரிப்பது, குப்புற விழுவது, தவழ்வது போன்ற எந்தச் செயலையும் செய்யவில்லை. தன் மகனின் நிலை குறித்து கலங்கிய தாய் நிலா, தன் மகனை மருத்துவரிடம் காட்டியபோது, மகனுக்கு ஆட்டிசம் நோய்ப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தாயின் மனது இதை முதலில் ஏற்க மறுத்தாலும், பின்னர் எதார்த்தத்தை ஏற்று தொடர் சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு அய்யப்பனைத் தயார் செய்தார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனை ஐந்து வயதில் பள்ளியில் சேர்த்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுபது விழுக்காடு மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடைய வைத்துள்ளார். இத்தகைய நோயாளிப் பிள்ளைகள் 10ம் வகுப்பு வரை வருவதே பெரிய விடயம். ஆனால் தாய் நிலா, அடுத்த கட்டத்துக்கும் தன் மகனைத் தயார் செய்து வருகிறார். இதற்காக, தான் அனுபவித்த கஷ்டங்களை வார்த்தையால் விவரிக்க முடியாது என்று தி இந்து நாளிதழிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் நிலா. கடந்த 10 ஆண்டுகளாக மகன் அய்யப்பனை இரண்டு பேருந்துகள் பிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தும், சற்றும் தளராமல் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலா சொல்கிறார்....

ஆம். விடாமுயற்சி இருந்தால் அனைத்தும் சாத்தியமே. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வியும் சாத்தியமே. எங்களுடைய காலத்துக்குப்பின், என் மகன் அவனுடைய வேலைகளை அவனே செய்து கொள்வான். இந்த உலகில் அவன் நம்பிக்கையுடனும் சுயச்சார்புடனும் வாழ்வதற்கான வழியை நாங்கள் கற்றுத் தந்திருக்கிறோம். ஆட்டிசம் ஒரு குறைபாடுதானே தவிர மனநோய் அல்ல. இந்தக் குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பார்கள். தங்களுக்கென்று தனி உலகத்தை உருவாக்கி அதிலேயே மூழ்கியிருப்பார்கள். பெரும்பாலான பெற்றோரிடம் சகிப்புத்தன்மையும், விழிப்புணர்வும் இல்லாததால் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அப்படியே விடப்படுகின்றனர்.

அய்யப்பனின் தாய் நிலா சொன்னது போல, விடாமுயற்சி இருந்தால் அனைத்தும் சாத்தியமே. இதற்கு மற்றுமொரு சான்றாய் நிற்கிறார் 29 வயது அமெரிக்க மாற்றுத் திறனாளி Tatyana McFadden. “வேடிக்கையைப் பாருங்கள், எல்லாரும் என்னைத் துரத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால் நான்தான் அவர்களைத் துரத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும் இவர், பாஸ்டன், நியூயார்க், சிகாகோ, லண்டன் என்ற நான்கு மாரத்தான் பட்டங்களையும் ஒரே ஆண்டில் பெற்றவர். மாற்றுத் திறனாளிகளிலோ, நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களிலோ, இந்தச் சாதனையைச் செய்தவர்கள் இதுவரை யாரும் இல்லை. Tatyana, இரஷ்யாவில், முதுகெலும்பில் துளையுடன் இடுப்புக்குக் கீழே இயங்காத தன்மையோடு பிறந்தார். பிறந்த 3 வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் வறுமையின் பிடியில் வாழ்ந்த அவரின் தாயால் அதற்கு ஏற்பாடு செய்ய இயலாமல், குழந்தையை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் சேர்த்துவிட்டார். ஆறு ஆண்டுகள்வரை தோள்களைக் கால்களாகவும் கைகளைப் பாதங்களாகவும் பயன்படுத்தி நகர்ந்து வந்தார் Tatyana. அமெரிக்காவைச் சேர்ந்த டிபோரா மெக்ஃபேடன், அரசு அலுவல் காரணமாக இரஷ்யாவுக்குச் சென்றபோது அந்த ஆதரவற்றவர் இல்லத்தில் Tatyanaவைச் சந்தித்தார். Tatyana நீண்ட நாட்கள் உயிர் வாழ வாய்ப்பில்லை என்றார்கள் மருத்துவர்கள். ஆயினும், நோய்களோடு உடல் பலமின்றி இருந்த Tatyanaவைத் தத்தெடுத்தார் டிபோரா. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

சிறு வயதில் டிபோராவுக்கு வந்த மர்மக் காய்ச்சல், அவரை மாற்றுத்திறனாளியாக மாற்றியிருந்தது. அதிலிருந்து மீண்டு, நீச்சல் வீராங்கனையாக மாறி, அரசு அலுவலகத்தில் வேலை செய்து வந்தார் டிபோரா. இரஷ்ய மொழி மட்டுமே அறிந்திருந்த அந்தக் குழந்தை, ஆங்கிலம் பேசும் அம்மாவுடன் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தது. முதலில் Tatyanaவுக்கு ஒரு சக்கர நாற்காலி வாங்கிக் கொடுத்தார் டிபோரா. பிறகு Tatyanaவுக்கு சில அறுவை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. உடல் தேறியதே தவிர, அவரின் பாதி உடல் இயங்கும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிட்டிருந்தது. பள்ளியில் சேர்ந்ததும் ஆர்வத்தோடு படித்தார் Tatyana. ஓய்வு நேரங்களில் விளையாட்டுகளில் ஈடுபட வைத்து, அவரது தசைகளை வலுவாக்கினார் டிபோரா. நீச்சல், உடல்பயிற்சி, சக்கரநாற்காலி கூடைப்பந்து, பனிச்சறுக்கு ஹாக்கி, மேலிருந்து செங்குத்தாக தண்ணீரில் விழும் விளையாட்டு என்று வரிசையாகக் கற்றுக்கொண்டு களத்தில் இறங்கினார் Tatyana. இறுதியில் சக்கர நாற்காலி ஓட்டப் பந்தயத்தில்தான் அவரது ஆர்வம் நிலைகொண்டது. தன்னுடைய வலுவான தோள்கள் மூலம் எளிதில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார் Tatyana. பள்ளியில் மற்ற மாணவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு Tatyanaவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் Tatyanaவுக்கு என்று சக்கர நாற்காலி ஓட்டப் பந்தயங்கள் தனியாக நடத்தப்பட்டன. வேறு யாரும் கலந்துகொள்ளாததால் வளாகத்தில் தனியாக ஓடிக்கொண்டிருந்தார் Tatyana. இந்த நிகழ்ச்சி அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது.

சாதாரணமானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று Tatyanaவும், டிபோராவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாகப் பள்ளிகளிடையே தனிப் போட்டிகளையும் நடத்தலாம்’’ என்று தீர்ப்பு வெளியானது. இந்தச் சட்டம் Tatyana சட்டம் என்றே அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் 13 மாநிலங்களில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. 2013ம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சமவாய்ப்பு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 15 வயதில் மாற்றுத் திறனாளிகளுக்கான கோடை ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற டச்யானாவின் வெற்றி வேகத்தை இன்றுவரை குறைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் தங்கப்பதக்கம் பெற்று உலகச் சாம்பியனாக மாறியதோடு, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனையையும் படைத்தார் Tatyana. 2010 நியூயார்க், 2011 சிகாகோ, 2011 இலண்டன், 2015 பாஸ்டன் மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டங்களைப் பெற்றார். 2013ம் ஆண்டில் மட்டும் நான்கு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்திலும் சாம்பியன் பட்டங்களை வென்றார். இதுவரை யாரும் செய்யாத உலக சாதனை இது! அதே ஆண்டிலே ஆறு தங்கப் பதக்கங்களை வென்று உலகச் சாம்பியன் பட்டங்களையும் குவித்தார். தற்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கிறார். உளவியல் ஆலோசனைகள் கொடுக்கிறார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டிக் கொடுக்கிறார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதி வெளியிடுகிறார். தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளி சாதனையாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் Tatyana என்று தி இந்து தினத்தாளிலும், இணையத்தளத்திலும் வாசித்தோம்.

இந்நாள்களில் பயங்கரவாதத் தாக்குதல்களும், கொலைகளும் தினத்தாள்களில் அதிகமான பக்கங்களை ஆக்ரமிப்பு செய்வதைக் காண்கிறோம். கடந்த வாரத்தில் குவைத்தில் ஷியா மசூதி தாக்குதல், துனிசியாவில் தாக்குதல். தெற்காசிய குடிபெயர்வோர்  மேற்கொண்ட ஆபத்தான படகுப் பயணத்தில் மீதமிருந்த உணவுக்காகச் சண்டையிட்டதில் ஏறக்குறைய நூறு பேர் இறந்துள்ளனர். இப்படி பல செய்திகள். துனிசியாவில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக இஞ்ஞாயிறன்று அந்நாட்டில் ஊர்வலம் நடந்தது. அப்போது மக்கள், இதில் இறந்தவர்கள் மனித சமுதாயத்தின் சகோதர சகோதரிகள் என்று கூறி தங்களின் ஆதங்கத்தை வெளியிட்டனர். அன்புள்ளங்களே, உலகின் சில பகுதிகளில் அப்பாவிகள் கொத்து கொத்தாகக் கொலை செய்யப்படும் நிலையில், திருச்சி அய்யப்பன்களும், நீலாக்களும், அமெரிக்க Tatyanaக்களும், டிபோராக்களும் வாழ்வின் மதிப்பை உணர்த்தி தன்னம்பிக்கையூட்டி வருகின்றனர்.

பொதுவாக, நாம் நினைத்ததெல்லாம் நடக்கவேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம்; ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதி நம் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றாமல் இருப்பதே இதற்கு காரணம். சிங்கப்பூர், பரப்பளவில் மிகச் சிறிய நாடாக இருந்தபோதிலும், அம்மக்களின் வாழ்க்கைத்தரம், தொழில் முன்னேற்றம், சட்டம் ஒழுங்கு முதலியவற்றில் தலைசிறந்து விளங்குவதற்குக் காரண கர்த்தாவாக இருந்தவர் அந்நாட்டுத் தந்தை லீ குவான் யு அவர்கள். இலஞ்சம் ஊழல் இன்றி, கடும் சட்டதிட்டங்களுடன் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், கவலையின்றி உறங்குவதற்கும் தனது தூக்கத்தைத் தியாகம் செய்து உழைத்தவர் இவர். உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த இந்த மனிதரின் சாதனையைக் கண்டு வியக்காதவர் இல்லை. ஒரு நாட்டை உருவாக்குவது என்பது அத்தனை எளிதா? ஆனால் அவரின் மனஉறுதியும், விடாமுயற்சியுமே அனைத்தையும் சாத்தியமாக்கியது. 

அடிப்படையில் நம் அனைவரின் மனங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பயிற்சியும், முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற மனங்களாக உருவாக்குகின்றன என்று பெரியோர் சொல்கின்றனர். முயற்சியும், பயிற்சியும் இருந்தால், ஒருவர் தனது மனத்தையே மூலதனமாக்கலாம், எதையும் சாதிக்கலாம். அப்போது, நம் கவிஞர்கள் சொல்வதுபோல, வானம் தொட்டுவிடும் தூரத்தில்தான் தெரியும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால், நேயர்களே, வானத்தை எட்ட உங்களாலும் முடியும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.