2015-06-29 16:00:00

போதைப்பொருளைப் பயன்படுத்துபவரில் 6/1ல் மட்டுமே மருத்துவம்


ஜூன்,29,2015. போதைப்பொருள் தாவரங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு மாற்று வளர்ச்சித் திட்டம் தேவை என்றும், உலகின் உறுதியான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு உலகத் தலைவர்கள் முயற்சிக்குமாறும் ஐ.நா. தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளான கடந்த வெள்ளியன்று(ஜூன் 26) செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், உலகின் வளர்ச்சித் திட்டத்தோடு தொடர்புடையதாக அமைய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.  

மேலும், இந்த உலக நாளில் ஆண்டறிக்கை வெளியிட்ட ஐ.நாவின் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் குற்றச்செயல்கள் தடுப்பு அலுவலகம் (UNODC), 2013ம் ஆண்டில் 24 கோடியே 60 இலட்சம் பேர் சட்டத்துக்குப் புறம்பே போதைப்பொருள்களைப் பயன்படுத்தினர் என்று கூறியுள்ளது. இவர்களில் 5 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள், 15க்கும் 64 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும், போதைப்பொருள் ஊசியை உடலில் ஏற்றிய 16 இலட்சத்து 50 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயாளிகள் என்றும் அவ்வறிக்கை கூறியது.

உலகளவில் போதைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு அடிமையானவர்களில், ஆறு பேரில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவ வசதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களில் மூவரில் ஒருவர் பெண்கள் எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் உற்பத்தி அதிகரித்துள்ளது என்றாலும், உலகளவில் கொக்கோ இலை பயிரிடப்படுவது குறைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் ஐ.நா.பொது அவையில் 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.