2015-06-27 15:52:00

வெப்பத்தின் கொடுமை - பாகிஸ்தான் காரித்தாஸ் உதவிகள்


ஜூன்,27,2015. கடந்த பல ஆண்டுகள் கண்டிராத அளவு, பாகிஸ்தானில் நிலவும் வெப்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாகிஸ்தான் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு உதவிகள் செய்து வருகிறது.

வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தண்ணீர் விநியோகம் செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது ஆகிய பணிகளில் காரித்தாஸ் ஈடுபட்டுள்ளதென்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

கடுமையான அளவு நிலவும் இந்த வெப்பக் காலத்தில், லாகூர் நகரில் மின்சாரம் தடை பட்டிருப்பது மக்களின் வாழ்வை இன்னும் கடினமாக்கியுள்ளது என்றும், இதனால், அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

மக்களின், குறிப்பாக, வறியோரின் மிக அடிப்படை தேவைகளான தண்ணீர், மின்சாரம் ஆகிய இரண்டையும் உடனடியாகத் தருவதற்கு அரசு இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் இயக்குனர், அருள்பணி Saleh Diego அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.