2015-06-27 16:46:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை


ஜூன்,27,2015. ஜூன் 29, வருகிற திங்களன்று, உரோம் மறைமாவட்டத்தின் பாதுகாவலர்களான திருத்தூதர் பேதுரு, பவுல் ஆகியோரின் திருநாளையொட்டி, வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள கான்ஸ்டான்டினோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்விரு சபைகளின் ஒன்றிப்பு, இருவரும் இணைந்து கொண்டாடும் திருப்பலியாக உருவாகும் நாளை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கான்ஸ்டான்டினோபிள் திருஅவையின் பாதுகாவலரான திருத்தூதர் புனித ஆந்திரேயாவின் திருநாளன்று, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுடந் தான் பகிர்ந்துகொண்ட சமாதான அணைப்பு, கத்தோலிக்கத் திருஅவையும், கான்ஸ்டான்டினோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையும் இணையும் வாய்ப்பு உள்ளதென்ற நம்பிக்கையை தனக்குத் தந்ததென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே இறையியல் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ ஓர் உரையாடல் பணிக்குழு அமைவதை, தான் முழுமனதுடன் ஆதரிப்பதாகவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

அண்மித்துவரும் ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் மாமன்றமும், கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர்கள் பொதுமன்றமும் மிகுந்த பலன்தரும் முயற்சிகளாக அமைய அனைவரும் வேண்டுவோம் என்ற விண்ணப்பத்தை, இச்சந்திப்பில் திருத்தந்தை விடுத்தார்.

'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் வெளியானபோது, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களின் பிரதிநிதியாக, பேராயர் யோவான் அவர்கள் இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து பரிமாறியது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டார் திருத்தந்தை.

திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் ஆகியோரின் விழாவையொட்டி, கான்ஸ்டான்டினோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், திருத்தந்தைக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார்.

கான்ஸ்டான்டினோபிள் முதுபெரும் தந்தையரும், கத்தோலிக்கத் திருஅவையின் திருத்தந்தையரும், கி.பி. 526ம் ஆண்டு முதல் ஒருவர் ஒருவரைச் சந்தித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.