2015-06-27 14:12:00

கடுகு சிறுத்தாலும் – கூட்டத்தைக் குணமாக்கியப் பெண்


இரத்தப்போக்கு நோயுள்ள பெண், சமூகத்தினின்று விலக்கி வைக்கப்பட வேண்டும். இது இஸ்ராயலர்களின் விதி. ஆனால், இவரோ கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் மனமெங்கும் ஒரே மந்திரம்: "அவர் ஆடைகளின் விளிம்பைத் தொட்டாலும் போதும், நான் குணம் பெறுவேன்."

அந்தப் பெண்ணுக்குத் தெரியும்... இயேசுவுக்கு முன்னால் சட்டங்களும், சம்பிரதாயங்களும் சாம்பலாகிப்போகும் என்று அவருக்குத் தெரியும். இருந்தாலும் அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த சமூகத்தைப்பற்றி... முக்கியமாக இயேசுவைச் சுற்றியிருந்த ஆண் வர்க்கத்தைப்பற்றி.

கூட்டத்தில், அந்த குழப்பத்தின் மத்தியில் இயேசுவை அணுகுவதைத் தவிர வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார்.

பெண்ணென்றும், நோயுற்ற பெண்ணென்றும், அதிலும் இரத்தப் போக்குள்ள பெண்ணென்றும் அடுக்கடுக்காய் தன்மீது தீட்டுக்களைச் சுமத்தி, தன்னை ஒதுக்கிவைத்த சமுதாயத்தின் மேல் பன்னிரு ஆண்டுகளாய் அந்தப் பெண் வளர்த்து வந்திருந்த வெறுப்புக்கள், வர்மங்கள், வேதனைகள், வெறிகள் எல்லாம் அந்தக் கணத்தில் விடைபெற்று மறைந்தன. விடுதலை பெற்றார் அவர்.

இயேசு அந்தப் பெண்ணிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" (மாற்கு 5: 34) என்று சொன்னார். அதுமட்டுமல்ல, "உன்னால் இன்று இக்கூட்டத்தில் பலர் குணம் பெற்றனர். சட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாகி, மனிதரை மதிக்கத்தெரியாமல் மக்கிப்போயிருந்த பலர் இன்று உன்னால் குணம் பெற்றனர், சமாதானமாகப் போ!" என்று அசீர் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.