2015-06-27 16:08:00

ஒரேபாலின திருமண அங்கீகாரம் - அமெரிக்க ஆயர்கள் எதிர்ப்பு


ஜூன்,27,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாலினத் திருமணத்தை அனுமதிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் இவ்வெள்ளிக்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து, ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளது, அமெரிக்க ஆயர்கள் பேரவை.

ஒரே பாலினத் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் இந்தப் புதிய தீர்ப்பு, துயரம் தரும் ஒரு பிழை என அறிவித்துள்ள அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜோசப் குர்ட்ஸ் அவர்கள், இத்தகையத் தீர்ப்பால், மனித இயல்பின் உண்மைத் தன்மைகளிலும் திருமணத்தின் உண்மைத் தன்மைகளிலும் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை என்றார்.

ஒரே பாலினத்தவரின் திருமணம் செல்லுபடியாகும் என அரசு அங்கீகரிப்பது, நன்னெறி வாழ்வுக்கு முரணானது மட்டுமல்ல, அநீதியுமானது என்று கூறினார் பேராயர்.

ஒரு தந்தையாலும் தாயாலும் வளர்க்கப்படவேண்டும் என்ற ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையை மீறுவதாக, ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கும் புதிய சட்டம் உள்ளது என மேலும் தன் கவலையை வெளியிட்டார் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் குர்ட்ஸ். 

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.