2015-06-26 15:43:00

வத்திக்கான், பாலஸ்தீனா இடையே முற்றுமுழுதான ஒப்பந்தம்


ஜூன் 26,2015. வத்திக்கானுக்கும் பாலஸ்தீன நாட்டிற்கும் இடையேயான நல்லுறவுப் பாதையின் முக்கியப் படியாக, இவ்வெள்ளியன்று இவ்விரு நாடுகளிடையே முற்றுமுழுதான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய திருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட்டு காலகர் அவர்கள், இரு நாடுகளிடையே உருவாகியுள்ள இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதோடு, அப்பகுதியின் அமைதிக்கும் உதவும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.

பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் திருப்பீடத்திற்கும் இடையே 2000மாம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி கையெழுத்திடப்பட்ட அடிப்படை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் துணையுடன், இந்த முற்றுமுழுதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றார் பேராயர் காலகர்.

முதலில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் கையெழுத்திடப்பட்டது, தற்போது பாலஸ்தீனிய அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிலை வரை வந்துள்ளதற்கு, உறுப்பினரல்லாத பாலஸ்தீனா, ஐ.நா. அவையில், 2012ம் ஆண்டு, பார்வையாளராக அங்கீகரிக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றார், பேராயர் காலகர்.

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் மக்களிடையே துயரங்களுக்கு காரணமாக இருக்கும் மோதல்கள் முடிவுக்கு வர,  தற்போதைய ஒப்பந்தம் ஏதாவது ஒருவகையில் உதவுவதாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் பேராயர் காலகர் எடுத்துரைத்தார்.

சமூகத்தின் பொதுநலனுக்காக பாலஸ்தீன மக்கள் அனைவருடனும் இணைந்து உழைக்க ஆவல் கொள்ளும் திருஅவை, எவ்விதச் சிறப்புச் சலுகைகளையும் இதன் மூலம் பெறவிரும்பவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய, திருப்பீடத்தின் வெளியுறவுச்செயலர் பேராயர் காலகர் அவர்கள், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் எடுத்துக்காட்டாக செயல்படவுள்ள இந்த ஒப்பந்தம், மத்தியக் கிழக்குப் பகுதியின் ஏனைய இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.