2015-06-26 16:03:00

மணிலாவில், திருநற்கருணை மாநாட்டின் 'திருப்பயண அடையாளம்'


ஜூன்,26,2015. 2016ம் ஆண்டு, பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் 51வது திரு நற்கருணை அகில உலக மாநாட்டின் 'திருப்பயண அடையாளம்' (Pilgrim Symbol) ஜூலை 2ம் தேதி முதல், 6ம் தேதி முடிய மணிலா பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று, மணிலா பேராயர் கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் அறிவித்துள்ளார்.

பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்தவ மறையைப் பரப்ப பெரும் துணையாக இருந்த Ferdinand Magellan என்பவரால் நிறுவப்பட்ட Magellan சிலுவை, 51வது திரு நற்கருணை அகில உலக மாநாட்டின் அடையாளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு சனவரி 24ம் தேதி முதல், 31ம் தேதி முடிய பிலிப்பின்ஸ் நாட்டின் செபு (Cebu) நகரில் நடைபெறவிருக்கும் திரு நற்கருணை மாநாட்டிற்கு ஆன்மீக அளவில் தயார் செய்ய, Magellan சிலுவை, நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் திருப்பயணமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

1937ம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற திரு நற்கருணை அகில உலக மாநாட்டை அடுத்து, 2016ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 51வது திரு நற்கருணை அகில உலக மாநாடு, பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெறும் இரண்டாவது திரு நற்கருணை மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CBCP /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.