2015-06-26 15:35:00

பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் உதவி, கல்வி - திருத்தந்தை


ஜூன்,26,2015. சமுதாயத்தில் பொறுப்புள்ள பணிகளில் பெண்கள் முழுமையாக ஈடுபட, கல்வி பெரும் உதவியாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அகில உலக கத்தோலிக்க வழிகாட்டிகள் கருத்தரங்கு என்ற அமைப்பு, ஜூன் 25, இவ்வியாழன் முதல், 30 வருகிற செவ்வாய் முடிய உரோம் நகரில் நடத்தி வரும் ஒரு கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

43 நாடுகளிலிருந்து வந்திருந்த 260 உறுப்பினர்களை வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வமைப்பின் 50ம் ஆண்டு நிறைவை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டு, அவர்களைப் பாராட்டினார்.

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு மனிதகுலம் சந்திக்கும் சவால்களைச் சாமாளிக்க, கல்வியே சிறந்த வழி என்று, அண்மையில் தான் வெளியிட்ட 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ளதை, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கடவுள் படைத்த இந்த அழகிய உலகை, ஆழமான தியான மனநிலையில் சந்திக்கும் பக்குவத்தை, அகில உலக கத்தோலிக்க வழிகாட்டிகள் அமைப்பில் உள்ளவர்கள் கற்றுத்தரவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார், திருத்தந்தை.

1965ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில உலக கத்தோலிக்க வழிகாட்டிகள் அமைப்பு, பொதுநிலையினர் திருப்பீட அவையின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.