2015-06-26 16:02:00

திருத்தந்தையின் திருமடலுடன் இணையும் அமெரிக்க ஆயர்கள்


ஜூன்,26,2015. தன் திருமடல் வழியே, படைப்பைக் காப்பதற்கு திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் இணைந்து நிற்கிறோம் என்று, மயாமி பேராயர், தாமஸ் வென்ஸ்கி (Thomas Wenski) அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட 'இறைவா உமக்கே  புகழ்' என்ற திருமடலின் எதிரொலியாக, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், இயற்கையைக் காக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி, மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவர், பேராயர் வென்ஸ்கி அவர்கள், அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

காலநிலை மாற்றத்தைக் குறித்து, அமெரிக்க ஆயர் பேரவை தன் கவலையை அடிக்கடி வெளியிட்டு வருகிறது என்று கூறிய பேராயர் வென்ஸ்கி அவர்கள், கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில் அமெரிக்க அரசு எடுக்கவேண்டிய முயற்சிகள் இன்னும் தீவிரமாகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிலும், உலகெங்கும் இயங்கிவரும் தொழில் நிறுவனங்கள், இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் தங்கள் உற்பத்தி வழிமுறைகளை மாற்ற, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொணரவேண்டும் என்பதையும் பேராயர்  வென்ஸ்கி அவர்களின் மடல் வலியுறுத்துகிறது. 

ஆதாரம் : ZENIT /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.