2015-06-24 16:25:00

தூரின் பேராலயத்தில் புனிதத் துணியின் பொதுவணக்கம் நிறைவு


ஜூன்,24,2015. திருமண உறவு, புனிதமானது, பிரிக்க முடியாதது என்பதை வலியுறுத்த, புனித திருமுழுக்கு யோவான் தன் உயிரைத் தியாகம் செய்தார் என்று தூரின் நகரப் பேராயர் Cesare Nosiglia அவர்கள் கூறினார்.

இயேசுவின் அடக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்ட புனிதத் துணி, இவ்வாண்டு ஏப்ரல் 19, ஞாயிறு முதல், தூரின் நகரின் பேராலயத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்தப் பொது வணக்கம், ஜூன் 24, இப்புதனன்று கொண்டாடப்பட்ட திருமுழுக்கு யோவான் பிறந்த நாளன்று நிறைவுக்கு வந்தது.

இப்புதன் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிறைவுப் பலியை தலைமையேற்று நடத்திய பேராயர் Nosiglia அவர்கள், ஒருவர் கொண்டிருக்கும் ஆழமான விசுவாசத்தையும் அன்பையும் பறைசாற்றத் தேவையான துணிவிற்கு, திருமுழுக்கு யோவான் தலை சிறந்த எடுத்துக்காட்டு என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூரின் நகருக்கு வருகை தந்தது, அவ்வூர் மக்களின் விசுவாசத்தை உலகறியச் செய்வதற்கு ஒரு தகுந்த தருணமாக அமைந்தது என்பதையும், பேராயர் Nosiglia அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

தூரின் நகரில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், தொடர்ந்து நம்பிக்கையோடு நாம் பயணம் செய்வதற்கு, திருத்தந்தையின் வேண்டுதல்களும், திருமுழுக்கு யோவானின் பாதுகாவலும் நமக்கு உண்டு என்று, பேராயர் Nosiglia அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.