2015-06-24 15:57:00

கிறிஸ்தவ சபைகளின் உலக அவைக்கு திருத்தந்தையின் செய்தி


ஜூன்,24,2015. துன்புறும் மனித சமுதாயத்திற்குப் பணியாற்ற, நமது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, உரையாடல் முயற்சிகளைத் தொடரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று அனுப்பிய ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவையும், கிறிஸ்தவ சபைகளின் உலக அவையும், ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஈடுபட செயற்குழுவை உருவாக்கிய 50ம் ஆண்டு நிறைவையொட்டி, கிறிஸ்தவ சபைகளின் உலக அவையின் பொதுச் செயலர், அருள்திரு முனைவர், Olav Fykse Tveit அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இச்செவ்வாய் மாலை உரோம் நகரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள், திருத்தந்தை அனுப்பிய இச்செய்தியை, கூட்டத்தின் துவக்கத்தில் வாசித்தார்.

உலகில் தற்போது நிலவும் எதார்த்தங்கள், நாம் கொண்டிருக்கும் கருத்துக்களைவிட முக்கியமானவை என்று, Evangelii gaudium என்ற தன் அறிவுரை மடலில் கூறியுள்ளதை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க, கிறிஸ்தவ சபைகள் இன்னும் அதிகமான வழிகளில் உலகின் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இன்று எழுந்துள்ள பிரச்சனைகளை கத்தோலிக்கரும், கிறிஸ்தவரும் திறந்த மனதுடன் சந்திக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை, இச்செய்தியில் விடுத்துள்ளத் திருத்தந்தை, அந்த ஒன்றிப்புக்காக ஒரு செபத்துடன் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.