2015-06-24 16:05:00

ஆயர்கள் பொது மன்றத்தில் பயன்படுத்தக்கூடிய நடைமுறை ஏடு


ஜூன்,24,2015. இவ்வாண்டு அக்டோபர் 4ம் தேதி முதல், 25ம் தேதி முடிய, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 14வது ஆயர்கள் பொது மன்றத்தில் பயன்படுத்தக்கூடிய, Instrumentum Laboris எனப்படும் நடைமுறை ஏடு, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

திருப்பீடத்தின் செய்தித் தொடர்பகத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், ஆயர்கள் பொது மன்றத்தின் பொதுச் செயலர், கர்தினால் லொரென்சோ பால்திசேரி, (Lorenzo Baldisseri), பொது மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் பீட்டர் எர்டோ (Peter Erdo), மற்றும் சிறப்புச் செயலர், பேராயர், ப்ருனோ ஃபோர்த்தே (Bruno Forte) ஆகியோர் இந்த ஏட்டைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

தற்போது வெளியாகியிருக்கும் நடைமுறை ஏடு, பொது மன்றத்தில் கலந்துகொள்வோருக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும், இந்த நடைமுறை ஏட்டில் மூன்று பகுதிகள் உள்ளன என்றும் கர்தினால் பால்திசேரி அவர்கள் விளக்கினார்.

குடும்பம் விடுக்கும் சவால்களுக்குச் செவிசாய்ப்பது, குடும்பம் என்ற அழைப்பை பகுத்துணர்வது, இன்றைய உலகில் குடும்பம் என்ற பணி, ஆகியவை இந்த மூன்று பகுதிகள் என்பதை கர்தினால் பால்திசேரி அவர்கள் செய்தியாளர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வெளியிடப்பட்டிருக்கும் இந்த நடைமுறை ஏடு, எவ்வகையிலும் திட்டவட்டமான முடிவுகளைக் கூறும் ஏடு அல்ல என்றும், நடைபெறவிருக்கும் பொது மன்றத்தில் கருத்துப் பரிமாற்றங்களைத் துவக்கிவைக்க மட்டுமே இந்த ஏடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், செய்தியாளர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

"திருஅவையிலும், இன்றைய உலகிலும் குடும்பங்களின் அழைப்பும், பணியும்" என்ற மையக் கருத்துடன் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் பொது மன்றத்தின் அமர்வுகள், எவ்வகையில் நடைபெறும் என்பதும், இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் விவரிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.