2015-06-24 16:08:00

அமைதி ஆர்வலர்கள் : 1987ல் நொபெல் அமைதி விருது


ஜூன்,24,2015. மழைக்காடுகள் அடர்ந்த, கரீபியன் மற்றும் பசிபிக் கடற்கரைகளில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடு கோஸ்தா ரிக்கா. அழகான கடற்கரைகளுக்கும், பல்வகை உயிரினங்களுக்கும் புகழ்பெற்ற இந்நாட்டில் எரிமலைகளும் உண்டு. 1847ம் ஆண்டில் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த இந்நாடு, அதன் பின்னர் இலத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து வளர்ந்துவரும், வளமையான நாடாக இருந்து வருகிறது. Oscar Arias Sánchez அவர்கள், இந்த கோஸ்தா ரிக்கா நாட்டின் அரசுத்தலைவராக 1986 முதல் 1990ம் ஆண்டு வரையும், 2006 முதல் 2010ம் ஆண்டு வரையும் பணியாற்றியவர். மத்திய அமெரிக்கப் பிரச்சனைகள் முடிவுக்கு வருவதற்கு இவர் எடுத்த முயற்சிகளுக்காக 1987ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

மிகத் திறமையான ஆட்சியாளராகவும், நல்ல நிர்வாகியாகவும் உள்ள இவர், பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற அறக்கட்டளை நிதி அமைப்பின் இயக்குனர்கள் அமைப்புக்கும் நியமிக்கப்பட்டார். 1972ல் அரசியலில் தனது வாழ்வைத் தொடங்கிய இவர், அரசுத்தலைவர் Jose Figueres Ferrers அவர்கள் அரசில், தேசிய திட்ட மற்றும் அரசியல் பொருளாதார அமைச்சராகப் பணியாற்றினார். Arias Sánchez அவர்கள், கோஸ்தா ரிக்கா நாட்டில் 1986ம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மனித முன்னேற்ற மையம், அமைதி மற்றும் ஒப்புரவு மையம், அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டரும் அவரது மனைவி ரோஸ்லினும் உருவாக்கிய மையம் என பல்வேறு நிறுவனங்களில் மனித சமுதாயத்துக்கு இவர் சேவையாற்றியுள்ளார். 1987ல் நொபெல் அமைதி விருது தவிர, பிலடெல்பியா சுதந்திரப் பதக்கம், Jackson Ralston உட்பட பல விருதுகளைப் பெற்றிருப்பவர் Arias Sanchez.

இவர், 1941ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, Costa Rica நாட்டின் Herediaவில், Juan Arias Sanchez, Lillyan Arias Sanchez தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இக்குடும்பம், அந்நாட்டில் பெரும் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகவும், புகழ்பெற்ற காப்பித் தோட்டப்பண்ணை உரிமையாளர்களில் ஒன்றாகவும் இருந்தது. மருத்துவம் படிக்கும் ஆவலில் அமெரிக்க ஐக்கிய நாட்டு பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெயரைப் பதிவு செய்த இவர், விரைவில் நாடு திரும்பி, கோஸ்தா ரிக்கா பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பட்டயங்கள் பெற்றார். Arias Sanchez அவர்கள், கல்வியில் சிறந்து விளங்கினார். இவரது அறிவுத்திறமையால், இலண்டனில் இரு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு கல்வி உதவித்தொகை பெற்றார். 1967ம் ஆண்டில் பிரிட்டன் சென்று Essex பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது கடின உழைப்பு, இவருக்கு ஹார்வார்டு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்கள், Dartmouth, Oberlin கல்லூரிகளில் முனைவர் பட்டங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கவுரவ பட்டயங்களையும் பெற்றார். 1973ல் Margarita Penon Gongora என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கோஸ்தா ரிக்கா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியபோது 1972ம் ஆண்டில் அந்நாட்டின் தேசிய திட்ட மற்றும் அரசியல் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார் அரியாஸ் சாங்ச்சேஸ். 1975ல் இவரது கட்சி இவரை பன்னாட்டுச் செயலராகவும், 1979ல் பொதுச் செயலராகவும் நியமனம் செய்தது. பல சோசலிச அனைத்துலக கருத்தரங்குகளில் இவர் தனது கட்சியின் சார்பில் கலந்துகொண்டார். 1978ம் ஆண்டு தேர்தலில் கிறிஸ்தவ சமூக ஐக்கிய கட்சி வெற்றி பெற்றது. ஆஸ்காரும் சட்டசபைக்குத் தெர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும் தனது கட்சி அரசுத்தலைவர் வேட்பாளர் லூயிஸ் ஆல்பெர்த்தோ மோஞ்சுக்காக உழைப்பதற்காக சட்ட சபையிலிருந்து விலகினார். 1982ல் லூயிஸ் வெற்றி பெற்றார் 1986ல் Arias Sanchez  அவர்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் அரசுத்தலைவர் ஆனவுடன், கோஸ்தா ரிக்கா நாட்டுப் பகுதியில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆதரவுடன் செயல்பட்ட கொந்த்ராஸ் குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தலையிட்டார். அச்சமயத்தில் நிக்கராகுவா நாட்டு அரசியல் அமைப்பு நெருக்கடியில் இருந்தாலும், மத்திய அமெரிக்காவில், அமைதியை ஏற்படுத்தும் திட்டத்தில், நிக்கராகுவா மற்றும் பிற மத்திய அமெரிக்க நாடுகளை ஈடுபடுத்தினார். 1986ம் ஆண்டு மே மாதத்தில் குவாத்தமாலா, எல் சால்வதோர், ஹொண்டூராஸ், நிக்கராகுவா ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களைச் சந்தித்து அமைதி ஒப்பந்தம் குறித்த பரிந்துரைகளை முன்வைத்தார். அச்சமயத்தில் அவர்கள் எந்த உடன்பாட்டுக்கும் வரவில்லை. ஆயினும், 1987ம் ஆண்டின் துவக்கத்தில் மீண்டும் ஒரு புதிய கூட்டத்துக்கு அவர்களை அழைத்து தனது சொந்த அமைதி திட்டத்தை முன்வைத்தார் ஆஸ்கார். இதனை ஆகஸ்ட் 7ம் தேதி குவாத்தமாலாவில் ஐந்து அரசுத்தலைவர்களும் ஏற்றனர். எனவே மத்திய அமெரிக்க நாடுகளுக்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காகவே அப்போதைய கோஸ்தா ரிக்கா அரசுத்தலைவரான Oscar Arias Sánchez அவர்களுக்கு 1987ல் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.

அமைதிக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருபோதும் முடிவுறாது. அது நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைப் புறக்கணிக்காது. அது நமது பொதுவான ஆவல்களையும் கண்டுகொள்ளாமல் விடாது. அமைதிக்கு நாம் சேர்ந்து வாழ்வதும், சேர்ந்து உழைப்பதுமே தேவைப்படுகின்றது என்று சொன்னவர் கோஸ்தா ரிக்கா நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் Oscar Arias Sánchez. இவர் அமைதி மற்றும் மனித உரிமை ஆர்வலராகவும், நாடுகள் மத்தியில் நல்ல தலைவராகவும் நோக்கப்படுகிறார்.  

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.