2015-06-23 15:36:00

விவிலியத் தேடல் : மணமகளின் தோழியர் உவமை – பகுதி - 5


அவசியமற்ற ஆயிரம் விடயங்களில் அதிக கவனம் செலுத்திவிட்டு, அவசியமான ஒன்றை மறந்துவிட்டால், வாழ்வில் முக்கியமானவற்றை, அல்லது, வாழ்வையே இழக்க வேண்டியிருக்கும். இதற்கு 1988ம் ஆண்டு வெளிவந்த ஒரு செய்தி, நல்லதோர் எடுத்துக்காட்டு. இது ஓர் எச்சரிக்கையும் கூட.

வீடியோப் படங்கள் எடுப்பதில் சிறந்த Ivan Lester McGuire என்ற 35 வயது கலைஞரின் மரணம் பற்றிய செய்தி 1988ம் ஆண்டு வெளியானது. பறக்கும் விமானத்திலிருந்து ஒரு குழுவாகக் குதித்து, கைகளைக் கோர்த்து, வானில் சாகசங்கள் புரிவோரைப் பற்றியச் செய்தி அது. Sky Diving என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தில் ஈடுபடுவோர், பறக்கும் விமானத்திலிருந்து குதிப்பார்கள். விண்வெளியில், ஒரு சங்கிலித்தொடராக கரங்களைப் பற்றியபடி, அந்தரத்தில், இக்குழுவினர், பல வடிவங்களை அமைத்துக் காட்டுவார்கள். பின்னர் பூமியை நெருங்கும் வேளையில், தங்கள் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு பொத்தானை அழுத்துவார்கள். உடனே, அவர்களுடன் இணைக்கப்பட்ட ஒரு 'பாரச்சூட்' விரியும். அவர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்குவர். இந்த சாகசங்களைப் பதிவு செய்வதற்கு வீடியோ படக்கலைஞர் ஒருவரும் இக்குழுவுடன் விமானத்திலிருந்து குதிப்பார். 1988ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5ம் தேதி நடந்த இச்சாகசத்தின்போது, 10,500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து ஒவ்வொருவரும் குதிப்பது வீடியோவில் காண்பிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒரு வட்டம் அமைப்பது வரை ஒழுங்காகக் காட்டப்பட்ட அந்த வீடியோ படம், திடீரென, தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் திரையில் ஒன்றும் இல்லை.

நடந்தது இதுதான். வீரர்கள் குதிப்பதை விமானத்திலிருந்தபடியே படம் பிடித்த வீடியோ கலைஞர் Ivan Lester McGuire அவர்கள், இறுதியாக, தானும் விமானத்திலிருந்து குதித்தார். வீடியோ எடுப்பதிலேயே கவனமாய் இருந்த அவர், தான் 'பாரச்சூட்' அணியவில்லை என்பதை உணராமல் குதித்துவிட்டார். வானில் நடைபெறும் இந்த சாகசகங்களை 800 முறைகளுக்கும் மேல் வீடியோ படம் எடுத்து புகழ்பெற்றவர் Ivan Lester McGuire. அன்று 'பாரச்சூட்' இல்லாமல் குதித்ததால், தன் வாழ்வை இழந்தார்.

தேவையானவை, தேவையற்றவை என்பனவற்றைத் தகுந்த வகையில் பிரிக்காமல், வாய்ப்புக்களையும், சில வேளைகளில் வாழ்வையும் இழப்போரைப் பற்றி நாம் அறிவோம். கடந்த சில வாரங்களாக, நாம் தேடல்களை மேற்கொண்டு வந்துள்ள 'மணமகளின் தோழியர் உவமை'யில், தங்களுக்குத் தேவையான எண்ணெயை எடுத்துச் செல்ல மறந்த ஐந்து தோழியரைக் குறித்து சிந்தித்து வந்தோம். 'எண்ணெய்தானே' என்று ஏளனமாக அவர்கள் எண்ணியப் பொருள், மணமகன் அழைப்பு என்ற முக்கிய நிகழ்வை அவர்கள் இழப்பதற்குக் காரணமானது. அவர்கள் அடைந்த இழப்பை, இவ்வுவமையின் இறுதிப் பகுதியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

மத்தேயு நற்செய்தி 25: 10-12

(அறிவிலிகளான ஐவரும் எண்ணெய்) வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, “ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது”என்றார்.

அறிவிலிகளான ஐந்து பெண்களும் அடைந்த இழப்பை இவ்விதம் கூறும் இயேசு, உடனே ஓர் எச்சரிக்கையை இணைக்கிறார். இவ்வுவமையின் இறுதி வார்த்தைகளாக இயேசு கூறும் இந்த எச்சரிக்கை, வாழ்வின் இறுதிக் கட்டத்தை நமக்கு நினைவுறுத்துகிறது.

மத்தேயு நற்செய்தி 25:13

இயேசு கூறியது: "எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."

'அவர் வரும் நாள்' என்று இயேசு குறிப்பிடுவது, நமது இறுதி நேரத்தைக் குறித்தே சொல்லப்பட்டது என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இறுதி நாட்களில், மனுமகனின் வருகை இருக்கும் என்பது இஸ்ரயேல் மக்கள் மனதில் பதிந்த ஆழமான கருத்து. அந்த மனுமகனை, மணமகனாக சித்திரிப்பதும் விவிலியத்தின் பல இடங்களில் காணப்படும் ஒரு கருத்து. மனுமகனை, ஒரு மணமகனாக உருவகித்து, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில பகுதிகள் இதோ:

இறைவாக்கினர் எசாயா 54: 5-6

ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், படைகளின் ஆண்டவர் என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்: உலக முழுமைக்கும் கடவுள் என அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.

இறைவாக்கினர் எசாயா 62: 4-5

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். கைவிடப்பட்டவள் என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்: பாழ்பட்டது என இனி உன் நாடு அழைக்கப்படாது… ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்: உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்: மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

இறைவாக்கினர் ஓசேயா 2: 19

இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்: நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்: ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்.

இறைவனை நாம் சந்திக்கச் செல்லும் நாளை திருமண விருந்தாக ஒப்பிட்டு இயேசு சொன்ன இந்த உவமையில், விழிப்பாயிருப்பதும், எரியும் விளக்குகளுடன் காத்திருப்பதும் முக்கியமான, அவசியமானத் தேவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன.

பல வேளைகளில் தேவை என்று நாம் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருப்பது, தேவையற்றதாகவும், தேவையற்றதென ஒதுக்குவது தேவையுள்ளதாகவும் மாறும் விந்தையும் நம் வாழ்வில் நடக்கும். முக்கியமாக, மரணம் நமக்கு முன் அமர்ந்திருக்கும்போது, நமது உண்மையானத் தேவைகள் என்னென்ன என்பதைப் பற்றி நாம் அனைவருமே உள்ளொளி பெறுவோம். ஆனால், அதுவரை காத்திருக்க வேண்டுமா?

உலகத்தில் எதுவும் இதனை மூழ்கடிக்க முடியாது என்ற ஆணவ விளம்பரத்துடன் புறப்பட்ட Titanic கப்பல், தன் முதல் பயணத்திலேயே பனிப் பாறையில் மோதி மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் பலர் கோடீஸ்வரர்கள். மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த இவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி, இவர்கள் பெற்ற உள்ளொளியைப் பற்றி கதைகள் பல சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கதைகளில் இதுவும் ஒன்று.

மூழ்கும் கப்பலில் இருந்த பயணிகள், குறிப்பாக முதல் வகுப்பில் பயணித்த செல்வந்தர்கள், உயிர்காக்கும் படகுகளில் ஏற்றப்பட்டனர். அவர்களில் ஒரு பெண், படகில் ஏறியபின், எதையோ எடுத்து வருவதற்காக தனது அறைக்கு மீண்டும் ஓடிச்சென்றார். வழியில் பணமும், நகைகளும் நிரம்பிய பல பைகள் தண்ணீரில் மிதந்ததைக் கண்டார். அவரது அறையிலேயே, திறந்திருந்த பீரோவில் அவரது வைர நகைகள் மின்னின. ஆனால், அவை எதுவும் அவர் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர் கவனம் எல்லாம் ஒரு சிறு அட்டைப் பெட்டியில் இருந்த ஒரு சில ஆரஞ்சு பழங்கள் மீது இருந்தது. அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர் மீண்டும் அந்த உயிர்காக்கும் படகில் ஏறினார்.

ஒரு மணி நேரத்துக்குமுன், கப்பல் நல்ல முறையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பணம், நகை இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அவர் அந்தப் பழங்களைத் தேடியிருப்பாரா? தன் வைரநகைகளைவிட ஆரஞ்சு பழங்கள் அவசியமானவை என்று அவர் சொல்லியிருந்தால், அவரைப் 'பைத்தியம்' என்று மற்றவர்கள் முத்திரை குத்தியிருப்பார்கள். ஆனால், கப்பல் மூழ்கும் வேளையில், மரணம் தங்களை நெருங்கியுள்ளது என்பதை உணர்ந்த வேளையில், வாழ்வின் அவசியங்கள் என்று அவர்கள் எண்ணி வந்த பட்டியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஜூன் 24, இப்புதனன்று, திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். கிறிஸ்து வளரவேண்டும், தான் குறையவேண்டும் என்ற விருதுவாக்கை தன் வாழ்நாளெல்லாம் கடைபிடித்தவர், யோவான். மணமகனாம் இயேசுவின் வருகையை இவ்வுலகில் அறிவிக்க, பாலைநிலத்தில் ஒலிக்கும் குரலாக வாழ்ந்தால் போதும், அவர் வந்ததும் அவரை மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு தான் மறைந்துவிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்த யோவானுக்கு, வாழ்வின் அவசியங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவரது பிறந்தநாளன்று 'மணமகளின் தோழியர் உவமை'யை நிறைவு செய்யும் நாம், திருமுழுக்கு யோவானைப் போல, முன்மதியுடைய தோழியர் போல வாழ்வின் அவசியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வரத்தை இறைவனிடம் இறைஞ்சுவோம்.

தேவையானவை, தேவையற்றவை, அவசியமானவை, அவசியமற்றவை, அலங்காரங்கள், ஆடம்பரங்கள் என்று நம் வாழ்வை நிறைத்துவிடும் பல அம்சங்களில், தேவையானவற்றை, அவசியமானவற்றைப் பிரித்துப்பார்க்கும் பக்குவம், கண்ணோட்டம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்வோம்.

“தற்போது நான் அதிகம் 'பிசி'யாக இருக்கிறேன். பல முக்கியமான அலுவல்கள் உள்ளன. இந்தப் பாகுபாடுகளைச் சிந்திக்க எனக்கு நேரமும் இல்லை, மன நிலையும் இல்லை. வாழ்வின் இறுதி காலத்தில், மரணம் நெருங்கும் வேளையில் இந்த வேறுபாடுகளையெல்லாம் சிந்தித்துக் கொள்ளலாம்” என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டால், நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டால், இயேசு, இவ்வுவமையின் இறுதியில் கூறும் வரிகள் நம்மைக் காப்பாற்ற வேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”  (மத்தேயு நற்செய்தி 25: 13)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.