2015-06-23 16:20:00

திருத்தந்தையுடன் உணவருந்திய இளங்குற்றவாளிகள் பெருமகிழ்ச்சி


ஜூன்,23,2015. இளம் குற்றவாளிகளை சந்தித்து உரையாடுவதில் எப்போதும் ஆர்வம் காட்டிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூரின் நகரிலும் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி தருவதாக இருந்தது என அறிவித்தார் சலேசிய சபை அருள்பணியாளர் தொமெனிக்கோ ரிக்கா.

கடந்த 35 ஆண்டுகளாக தூரின் நகரில் அமைந்துள்ள Ferrante Aporti இளங்குற்றவாளிகள் சிறையின் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றிவரும் அருள்பணி ரிக்கா அவர்கள் உரைக்கையில், 17 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்ட 11 இளங்குற்றவாளிகள், திருத்தந்தையுடன் ஞாயிறன்று தூரின் பேராயர் இல்லத்தில் உணவருந்தியது, வாழ்நாளில் தனக்கும் அந்த இளையோருக்கும் மறக்கமுடியாத சம்பவம் என்றார்.

மேலும்,  தூரின் நகரில் இரு நாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தாத்தா, பாட்டியின் திருமணமும், தன் தந்தையின் திருமுழுக்கும் இடம்பெற்ற கோவிலைச் சென்று தரிசித்தார். இப்பயணத்தின்போது தூரின் பேராயர் இல்லத்தில் தன் உறவினர்கள் ஏறத்தாழ முப்பது பேரையும் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பூர்வீகம் தூரின் நகருக்கு 45 மைல்கள் தென்கிழக்கேயுள்ள Portocomaro எனும் சிறு நகராகும். இங்கிருந்து, திருத்தந்தையின் தந்தை, தன் இளவயதில் அவரின் பெற்றோருடன், 1929ம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டிற்கு குடிபெயர்ந்தார். 

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.