2015-06-22 10:31:00

தூரின் நகர் வித்தோரியோ சதுக்கத்தில் திருத்தந்தையின் மறையுரை


ஜூன்,21,2015. உண்மையான அன்பு ஏமாற்றுவதில்லை, நம்மைக் கைவிடுவதும் இல்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஜூன் 21, இஞ்ஞாயிறன்று தூரின் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின்போது, வித்தோரியோ (Vittorio) சதுக்கத்தில் தலைமையேற்று நடத்தியத் திருப்பலியின்போது, உண்மையான இறையன்பின் பண்புகளை, தன் மறையுரையில் விளக்கினார்.

இறைவனின் அன்பு, உண்மையான, கைவிடாத அன்பு; அனைத்தையும் மீண்டும் படைக்கிறது; பாறையைப் போல நிலைத்து நிற்பது என்ற மூன்று பண்புகளை, தன் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.

புயல் வீசும் நேரங்களில், மிகுந்த வேகத்துடன், வேதனைதரும் வகையில், அலைகள் நம்மைத் தாக்குகையில், இயேசுவின் அன்பு, ஒரு பாறையாக இருந்து, அவ்வலைகளிலிருந்து நம்மைக் காக்கிறது என்று திருத்தந்தை கூறினார்.

'பாறை' மற்றும் 'உறுதி' என்ற வார்த்தைகளின் பொருளை, தூரின் மற்றும் பியத்மோந்த் (Pietmont) பகுதிகளில் வாழ்ந்த நம் முன்னோர் நன்கு உணர்ந்தவர்கள் என்று கூறியத் திருத்தந்தை, அப்பகுதிகளில் புகழ்பெற்ற ஒரு கவிதையின் சில வரிகளை மேற்கோளாகக் கூறினார்.

இறைவன் என்ற பாறையை நம்பி, தங்கள் கடினமானப் பணிகளை மேற்கொண்டதால், இப்பகுதியிலிருந்து உலகெங்கும் சென்றுள்ள பல புனிதர்களும், அருளாளர்களும் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

அன்று கலிலேயக் கடலில் உருவான புயல்போல, இன்றும் உலகின் பல இடங்களில் வன்முறைப் புயல்களால் பலகோடி மக்களின் வாழ்வு அலைகழிக்கப் படுகின்றது என்பதை, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, துன்புறும் அனைவருக்கும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

தூரின் நகரின் வித்தோரியோ சதுக்கத்தில் திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியில், ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் கலந்துகொண்டனர் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.