2015-06-22 15:39:00

கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் திருத்தந்தை வழங்கிய உரை


ஜூன்,22,2015. உடன்பிறந்தோர் என்ற உணர்வை நாம் மீண்டும் கண்டுணர, அண்மைய ஆண்டுகளில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகள் உதவி செய்துள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தூரின் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்கள் மேற்கொண்ட மேய்ப்புப்பணிப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, இத்திங்கள் காலை 9 மணியளவில், தூரின் நகரில் அமைந்துள்ள வல்தேசே (Valdese) என்ற கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில், திருத்தந்தை வழங்கிய உரையில், நமது உடன்பிறந்தோர் உணர்வு, இயற்கை சார்ந்த உணர்வு அல்ல, மாறாக, கிறிஸ்தவ வாழ்வின் வேர்களைப் பகிர்ந்துகொள்வதால் எழும் உணர்வு என்று கூறினார்.

ஒன்றிப்பு எனும்போது, அனைவரும் ஒரே வழியில் சிந்திக்கவேண்டும் என்ற கட்டாயம் அல்ல என்பதை, தன் உரையில் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, விவிலியக் காலத்திலிருந்தே கிறிஸ்தவர்களிடையே பல்வேறு கருத்தியல்களைப் பின்பற்றிய பிரிவுகள் நிலவிவந்தன என்பதை, விவிலிய எடுத்துக்காட்டுகளுடன் கூறினார்.

வல்தனேசிய எவஞ்செலிக்கல் சபையை, கத்தோலிக்கத் திருஅவை நடத்திய கடுமையான வழிமுறைகளுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் மன்னிப்பு வேண்டினார்.

வல்தனேசிய சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் அண்மையக் காலங்களில் பகிர்ந்துவரும் நல்லுறவு முயற்சிகள் நிறைவைத் தருகின்றன என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.