2015-06-20 17:12:00

வருவாய் அதிகரிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்வு நோக்கமாக முடியாது


ஜுன்,20,2015. இத்தாலியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இத்தாலிய பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும் உழைத்துவரும் தொழில்துறை காப்பாளர் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருவாய் அல்லது உற்பத்தி அதிகரிப்பினாலேயே, நம் வாழ்வின் நோக்கத்தை அடைந்துவிட்டோம் என்று எவரும் எண்ணமுடியாது, ஏனெனில் இங்கு சமூகத்தில் உள்ள அனைவரின் ஆக்கபூர்வமான பங்கேற்பும் தேவைப்படுகின்றது என இத்தாலிய தொழிலாளர் கூட்டமைப்பின் அங்கத்தினர்களிடம் கூறினார் திருத்தந்தை.

தொழிலாளர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பது, பொறுப்புக்களை ஒப்படைப்பது, அவர்களின் திறமைகளை தூண்டுவது, அவர்களின் புதிய ஆலோசனைகளுக்கும் அர்ப்பணத்திற்கும் ஊக்கமளிப்பது போன்றவை, பல வாய்ப்புகளுக்கும் வருங்கால நம்பிக்கைகளுக்கும் உதவும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன், தனியார் உரிமைகளுக்குரிய மாண்புடன், நீதியை ஆதாரமாகக் கொண்டு பொருளாதாரச் சட்டங்கள் மதிக்கப்படும்போதுதான் உண்மையான வளர்ச்சியைக் கொணரமுடியும் என இத்தாலிய தேசிய தொழிலாளர் கூட்டமைப்பின் அதிகாரிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.