2015-06-20 17:49:00

உலகில் நீதி,அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு இணைந்து செபியுங்கள்


ஜுன்,20,2015. வாழ்வுக்கான உண்மை பாதையை விட்டு விலகி, மதத்தின் பெயரால் படுகொலைகளை நடத்தும் மக்களின் மனந்திரும்பலுக்காக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செபிக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை.

இஸ்லாமியர்களின் Eid al-Fitr திருவிழாவையொட்டி, இரமதான் மாதத் துவக்கத்தில் வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், இன்றைய உலகில் நீதி, அமைதி மற்றும் பாதுகாப்பிற்கென நம் அனைவரின் செபங்களும் தேவைப்படுகின்றன என அதில் விண்ணப்பித்துள்ளார்.

மதத்தின் பெயரால் இடம்பெறும் வன்முறைகளை, இணைந்து எதிர்கொள்ள கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அழைப்புவிடுக்கும் இத்திருப்பீடச் செய்தி, மக்களின் உரிமைகளும் வாழ்வும் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

சுயநல காரணங்களுக்காக பல்வேறு தீமைகளை இழைத்துவிட்டு அவைகளை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த முயல்வது பெரும் தவறு எனக்கூறும் இச்செய்தி, இத்தகைய தீமைகளை அகற்ற, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.