2015-06-19 16:00:00

புனித பூமியில், கிறிஸ்தவ கோவில், தீயினால் சேதமடைந்துள்ளது


ஜுன்,19,2015. புனித பூமியில், கலிலேயக் கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு முக்கியமான கிறிஸ்தவ கோவில், இப்புதன் இரவு தீயினால் சேதமடைந்துள்ளது.

கலிலேயக் கடற்கரையில் தன்னைப் பின்தொடர்ந்துவந்த 5000த்திற்கும் அதிகமானோருக்கு இயேசு உணவைப் பலுகச் செய்து கொடுத்த புதுமையின் நினைவாக, புனிதபூமியின் Tabgha என்ற இடத்தில் உள்ள பலுகச்செய்யும் கோவில், அடிப்படைவாத யூதக் குழுவினரால் தீவைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள், கோவில் சுவரில் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்த அடையாளங்களைக் கண்டுபிடித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த தீவிபத்தால், கோவிலின் வெளிப்புறச் சுற்று மட்டும் சேதமடைந்துள்ளதென்றும், உள்புறத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், இக்கோவிலைப் பராமரித்துவரும் புனித பெனடிக்ட் துறவி  அருள்பணி மத்தியாஸ் அவர்கள், UCAN செய்தியிடம் கூறியுள்ளார்.

இந்தத் தீவிபத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசுத் தலைவர் ருவன் ரிவ்லின் (Reuven Rivlin) அவர்கள், அனைத்து மதத் தலைவர்களையும் சந்தித்து, குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதாக UCAN செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.