2015-06-19 16:23:00

திருப்பீடம் : மோதல்களின் இடங்களில் 23 கோடி சிறார்


ஜுன்,19,2015. இன்றைய உலகில் மோதல்களால் பாதிக்கப்படுவோரில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் அப்பாவி பொது மக்கள் என்ற தன் ஆழ்ந்த கவலையை ஐ.நா. பாதுகாப்பு அவையின் சிறப்புக் கூட்டத்தில் வெளியிட்டார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னதித்தோ அவ்ஸா.

'குழந்தைகளும் ஆயுதம் தாங்கிய மோதல்களும்' என்ற தலைப்பில் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய அதன் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் அவ்ஸா அவர்கள், வீடுகள், பள்ளிகள், நல ஆதரவு மையங்கள், மத நிறுவனங்கள் என அனைத்தும் தொடர்ந்து தாக்கப்படுவதால், மக்களின் வாழ்வு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மோதல்கள் இடம்பெற்றுவரும் இடங்களில் ஏறத்தாழ 23 கோடி சிறார் வாழ்கின்றனர் என்ற பேராயர் அவ்ஸா அவர்கள், இவர்கள் கொல்லப்படுவது, அடிமையாக்கப்படுவது, பாலினவகையில் தவறாக நடத்தப்படுவது போன்றவை தொடர்கின்றன எனவும் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

ஒவ்வொரு நாட்டிலும், சிறாரை பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றபோதிலும், அவைகளை நடைமுறைக்குக் கொணர்வதில் பெரும் இடைவெளிகள் உள்ளன என்பதையும் எடுத்துரைத்து, புதிய சவால்களை எதிர்கொள்ளும் உலகு, புதிய யுக்திகளைக் கையாளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அவ்ஸா. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.