2015-06-19 17:01:00

திருத்தந்தை: நற்செய்தியை புரிந்து,உணர்ந்து,பின் அறிவியுங்கள்


ஜூன்,19,2015. நற்செய்தியை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல விரும்புவோர், முதலில் அதனை பக்தியோடு வணங்கி, வாசித்து, செவிமடுத்து அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க விவிலியக் கூட்டமைப்பின் 10வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை, அதன் புதியத் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களுடன் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோவானின் முதல் திருமுகத்தில் காணப்படும் 'நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்கின்றோம்' என்ற வார்த்தைகளை மையமாக வைத்து உரையாற்றினார்.

இவ்வுலகில் நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களும், அல்லது, அறிவிக்கப்பட்டாலும், அதை மீட்பின் செய்தியாக ஏற்றுக்கொள்ளாத இடங்களும் இன்னும் உள்ளன என்பதை இக்குழுவினரிடம் நினைவுபடுத்தியத் திருத்தந்தை, இறைவாக்கின் வலிமையும், அதற்கான ஆதரவும் குறையும்போது, பாரம்பரியம் மிக்க திருஅவைகளின் ஆன்மீக வளர்ச்சியும், இளமையான திருஅவைகளின் மறைப்பணி உந்துதலும் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

தன வார்த்தைகள் வழியே நம்மோடு தொடர்புகொள்ளும் கிறிஸ்துவுடன் நெருங்கிய   உறவு வைத்துக்கொள்ளும் வகையில், ஒவ்வொரு பங்குத் தளங்களிலும் சமூகங்களிலும் விவிலியம் தொடர்பான செயல்பாடுகள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.