2015-06-18 16:49:00

புலம் பெயர்ந்தோரின் நிலையை ஊடகங்கள் திரித்துக் கூறவேண்டாம்


ஜுன்,18,2015. இத்தாலி நாட்டிற்கு வந்துசேரும் புலம்பெயர்ந்தோர் குறித்தும், இந்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தோர் குறித்தும் சரியான, தகுதியான தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று, உரோம் நகரில் புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள Astalli மையம் கூறியுள்ளது.

ஜூன் 17, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் புலம்பெயர்ந்தோர் சார்பாக எழுப்பிய விண்ணப்பத்தையும், இத்தாலிய அரசுத் தலைவர், Sergio Mattarella அவர்கள் எழுப்பிய விண்ணப்பத்தையும் பாராட்டிய இந்த மையம், புலம் பெயர்ந்தோரின் நிலையை ஊடகங்கள் திரித்துக் கூறவேண்டாம் என்று விண்ணப்பித்துள்ளது.

ஜூன் 20, வருகிற சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசுகையில், புலம்பெயர்ந்தோர் சார்பில் பணியாற்றும் அனைவருக்கும் நாம் தலைவணங்கி பாராட்டு கூறும் அதேவேளையில், புலம்பெயர்ந்தோர் நுழையமுடியாதவாறு கதவுகளை மூடும் மனிதர்கள், நிறுவனங்கள் சார்பில் நாம் மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று கூறினார்.

உலகின் அனைத்து நாடுகளும், குறிப்பாக, வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் புலம்பெயர்ந்தோரை வரவேற்று வாழ்வளித்தால், உலகை இன்று அச்சுறுத்தும் இந்தப் பிரச்சனைக்கு நாம் தீர்வு காணமுடியும் என்று Astalli மைய இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர் கமில்லோ ரிபமோந்தி (Camillo Ripamonti) அவர்கள் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.