2015-06-18 13:04:00

திருத்தந்தையின் திருமடல்: இறைவா! உமக்கே புகழ் : ‘Laudato si’


இந்த முகவுரைப் பகுதி, இந்தத் திருமடலை முதல்முறை வாசிப்பதற்குப் பயனுள்ள வழிகாட்டியாகும். இந்த மடலை முழுவதும் வாசித்து உள்வாங்குவதற்கும், அதன் அடிப்படைத் தலைப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் இப்பகுதி உதவும். முதல் சில பக்கங்கள், இறைவா! உமக்கே புகழ் (“வாழ்த்தப்பெறுவாராக அல்லது “இறைவா! உமக்கே புகழ்) திருமடல் பற்றிய தொகுப்பைக் கொண்டுள்ளன. இதிலுள்ள ஆறு பிரிவுகளும் ஒவ்வொன்றும் சுருக்கித் தரப்பட்டுள்ளன. இவை இதிலுள்ள முக்கிய கருப்பொருளையும், முக்கிய தலைப்புகளையும் கொண்டிருக்கின்றன.

பொதுவான கண்ணோட்டம்

“நாம் நமக்குப் பின் வருகின்ற மக்களுக்கு, தற்போது வளர்ந்துவரும் சிறார்க்கு எத்தகைய உலகத்தை விட்டுச் செல்ல விரும்புகின்றோம்?” (160). இந்தக் கேள்வி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள, நம் பொதுவான இல்லத்தை பராமரிப்பது குறித்த இறைவா! உமக்கே புகழ் புதிய திருமடலின் மையமாக உள்ளது. “இந்தக் கேள்வி சுற்றுச்சூழலை மட்டுமே சார்ந்தது அல்ல; இந்த விவகாரத்தை, துண்டு துண்டாகவும் அணுக முடியாது”.  நம் சமூக வாழ்வின் அடிப்படையில் நாம் வாழ்வதன் பொருள் மற்றும் அதன் விழுமியங்கள் பற்றி நம்மை நாமே கேள்வி கேட்பதற்கு இது இட்டுச் செல்கின்றது. “இந்த உலகில் நம் வாழ்வின் நோக்கம் என்ன? நமது தொழில் மற்றும் நமது எல்லா முயற்சிகளின் இலக்கு என்ன? இந்தப் பூமி நமக்கு எதற்குத் தேவை?” இந்தக் கேள்விகளை நாம் ஆழமாகச் சிந்திக்காவிட்டால், சுற்றுச்சூழல் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறை குறிப்பிடத்தக்கப் பலன்களைத் தரும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுகிறார் (160).

புனித பிரான்சிஸ் அசிசியாரின், படைப்புகளின் இனிமைமிகு பாடலில், “என் ஆண்டவரே, உமக்கே புகழ்” என்ற அவரின் வேண்டுதலிலிருந்து இந்தத் திருமடலுக்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி, நம் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சகோதரியைப் போலவும், நம்மை அணைத்துக் கொள்ள தனது கரங்களை விரிக்கும் அழகான தாய் போலவும் நம் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகின்றது (1). நாமே இப்பூமியின் தூசி (cf. தொ.நூ. 2:7) என்பதை மக்கள் மறந்துவிட்டனர். நம் உடல்கள் இப்பூமியின் மூலப்பொருள்களால் ஆனது. இப்பூமியின் காற்றை நாம் சுவாசிக்கிறோம், அதன் நீரிலிருந்து நாம் வாழ்வையும், புதிய ஊக்கத்தையும் பெறுகிறோம் (2).

ஆனால் இப்போது இந்தப் பூமி, தவறாக நடத்தப்படுவதால் வருந்துகின்றது. இந்த உலகின் கைவிடப்பட்ட அனைத்தும் அதனோடு சேர்ந்து புலம்புகின்றது. அதனால் ஓர் “இயற்கையியல் மனமாற்றத்திற்கு” நம் ஒவ்வொருவரையும், தனியாட்களையும், குடும்பங்களையும், உள்ளூர் சமூகங்களையும், நாடுகளையும், பன்னாட்டுச் சமுதாயத்தையும் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் கூற்றுப்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைக்கிறார். நம் பொதுவான இவ்வில்லத்தைப் பராமரிக்கும் பணியின் அழகையும், பொறுப்பையும் உணர்ந்தவர்களாய் “திசையை மாற்றுவதற்கு” நாம் அழைக்கப்படுகிறோம். தற்போது நமது பூமிக்கோளத்திற்கு நேரிடுவது குறித்து உண்மையிலேயே வருந்தி, சுற்றுச்சூழலையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டுமென்ற விழிப்புணர்வு வளர்ந்து வருவதை மகிழ்வோடு ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் (19). இந்தத் திருமடல் முழுவதிலும் நம்பிக்கை ஒளிக்கதிர் வீசுகிறது. மனித சமுதாயம் நம் பொதுவான இல்லத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்று சேரும் சக்தியை இன்னமும் கொண்டுள்ளது என்ற ஒரு தெளிவான செய்தியையும் இது தருகிறது (13). ஆண்களும் பெண்களும் இவ்விடயத்தில் செயல்படும் நல்ல திறனை இன்னமும் கொண்டுள்ளனர் (58). எல்லாம் இழந்துவிடவில்லை. மோசமானதைச் செய்வதற்குச் சக்தியுடைய மனிதர்கள், தங்களுக்கு மேலாக உயர்ந்து நின்று, நல்லதை மீண்டும் தேர்ந்தெடுத்து, புதிய தொடக்கத்தை ஆற்றவதற்கு ஆற்றலைக் கொண்டுள்ளனர் (205).    

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் கூற்றைக் குறிப்பிட்டு கத்தோலிக்க விசுவாசிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு சொல்கிறார்: படைப்பிலும், இயற்கையிலும், படைத்தவரோடும் தங்களுக்கு இருக்கும் பொறுப்பையும் கடமையையும் கிறிஸ்தவர்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும் (64). நம் பொதுவான இல்லம் பற்றி எல்லா மக்களோடும் உரையாடலில் ஈடுபடவேண்டுமென சிறப்பாகக்  கேட்டுள்ளார் திருத்தந்தை (3). இந்தப் பகுதி முழுவதும் உரையாடல் பற்றிச் சொல்கிறது. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இது கருவியாக மாறுகிறது என்பது பிரிவு 5ல் சொல்லப்பட்டுள்ளது. பிற கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவ சமூகங்களும், மற்ற மதங்களும் இயற்கையியல் பற்றி தங்களின் ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தி மதிப்புமிக்க சிந்தனைகளையும் வழங்கியுள்ளன என்று திருத்தந்தை இம்மடலில் தொடக்கத்திலிருந்தே நினைவு கூர்ந்துள்ளார் (7). உண்மையில் இத்தகைய பங்களிப்புகள், அன்புக்குரிய கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களிடமிருந்து தொடங்கின (7) என்பது 8 மற்றும் 9ம் பத்திகளில் விரிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இந்த முயற்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களுக்கு, தனியாட்கள், கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல இடங்களில் திருத்தந்தை நன்றி தெரிவித்துள்ளார். எண்ணற்ற அறிவியலாளர்கள், மெய்யியலாளர்கள், இறையியலாளர்கள் மற்றும் பொதுநிலைக் குழுக்களின் சிந்தனைகள், இக்கேள்விகள் குறித்த திருஅவையின் சிந்தனையை வளப்படுத்தியிருக்கின்றன என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார் (7). மனித சமுதாயத்தின் முழு வளர்ச்சிக்கும், ஒருங்கிணைந்த இயற்கையியலுக்கும் (ecology) மதங்கள் ஆற்றிவரும் அதிகமான பங்கீட்டை உணருமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் (62).

இந்தத் திருமடலின் விவரங்கள் 15வது பத்தியில் விவரிக்கப்பட்டு ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை அடிப்படையாக வைத்து தற்போதைய நிலையை வழங்குவதிலிருந்து இது ஆரம்பிக்கின்றது (பிரிவு 1).  அடுத்த பிரிவு, விவிலிய மற்றும் யூத-கிறிஸ்தவ மரபை ஆராய்ந்துள்ளது (பிரிவு 2). அடுத்த 3வது பிரிவு, தொழில்நுட்ப உலகிலும், மனிதரின் அதிகப்படியான தன்னலத்திலும் உள்ள பிரச்சனைகளின் மூலத்தை அலசியுள்ளது (பிரிவு. 3). பின்னர் பிரிவு 4ல், சுற்றுச்சூழல் விவகாரத்தோடு பின்னிப் பிணைந்த, மனித மற்றும் சமூகக் கூறுகளைத் தெளிவாக மதிக்கும்” (137), ஒருங்கிணைந்த இயற்கையியலைப் பரிந்துரைக்கின்றது (பிரிவு 4). பிரிவு 5ல், தெளிவான தீர்மானங்கள் எடுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் எல்லா மட்டங்களிலும் நேர்மையான உரையாடலைத் தொடங்குமாறு திருத்தந்தை பரிந்துரைத்துள்ளார் (பிரிவு 5). நல்ல பொறுப்புள்ள மனசாட்சியால் வழிநடத்தப்படாத எந்தத் திட்டமும் சாரமுள்ளதாய் இருக்காது என்பதை நினைவுபடுத்தி (பிரிவு 6), கல்வி, ஆன்மீகம், அரசியல் மற்றும் இறையியல் தளங்களில் இது வளர்வதற்கு கருத்துகள், திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இறுதியில் இந்த மடல் இரு செபங்களுடன் நிறைவு பெறுகின்றது. ஒன்று, எல்லா வல்லமையும் நிறைந்த படைத்தவராம் இறைவனில் நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் உரியது. இரண்டாவது செபம், இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை அறிக்கையிடும் அனைவருக்குமானது.

இந்த திருமடலில் உள்ள பல்வேறு முக்கியமான கூறுகள் இதோ :

பிரிவு 1 – நமது பொதுவான இல்லத்திற்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?

படைப்பின் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பதற்கும், இன்று உலகிற்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை வேதனையோடு நினைவில் கொண்டு அதைத் துணிச்சலுடன் மாற்றுவதற்கும், அதன்மூலம் நாம் ஒவ்வொருவரும் அதற்கு என்ன செய்யலாம் என்பதற்கும் ஒரு வழியாக, சுற்றுச்சூழல் குறித்த மிக அண்மை அறிவியல் கண்டுபிடிப்புகளை முதல் பிரிவு வழங்குகிறது (19). இவ்வாறு தற்போதைய இயற்கையியல் பிரச்சனைகளின் பல்வேறு கூறுகளை இது பகுத்தாராய்கிறது (15).

மாசுக்கேடும் காலநிலை மாற்றமும்: காலநிலை மாற்றம் என்பது, சுற்றுச்சூழல், சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் வளங்களைப் பங்கிடுதலில் கடும் விளைவுகளைக் கொண்டிருக்கும் உலகளாவிய பிரச்சனையாகும். இது, நம் காலத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றை முன்வைக்கிறது (25). காலநிலை, பொதுப் பொருளாக, எல்லாருக்கும் உரியதாக இருந்தால் (23), இந்த மாற்றம் ஏற்படுத்தும் மிகப்பெரும் தாக்கம், மிகவும் வறிய மக்களில் ஏற்படுத்துகின்றது, ஆனால், அதிகமான வளங்களையும், பொருளாதார அல்லது அரசியல் ஆதிக்கத்தையும் கொண்டிருப்பவர்களில் பலர், இந்தப் பிரச்சனைகளை அல்லது அதன் தாக்கங்களை மறைப்பதில் ஒரு முகமூடி போட்டுக்கொண்டு இதில் மிகக் கருத்தாய் இருப்பதுபோல் காட்டிக்கொள்கின்றனர் (26). அதேநேரம், நம் சகோதர சகோதரிகளை ஈடுபடுத்தும் இந்தக் கொடுந்துன்பங்களுக்கு நாம் பதிலளிக்காமல் இருப்பது, அனைத்து மனிதாரலும் ஆன இந்தச் சமுதாயம் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஆண் பெண் மீது, நாம் பொறுப்புணர்வு இழந்துள்ளதைக் காட்டுகிறது (25).

தண்ணீர் விவகாரம்: எல்லாருக்கும் பாதுகாப்பான குடி தண்ணீர் கிடைக்க வேண்டியது அடிப்படையான மற்றும் உலகளாவிய உரிமையாகும். ஏனெனில் இது மனிதர் உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதது, மேலும் இது, மற்ற மனித உரிமைகளை செயல்படுத்துவதற்கு ஒரு படிநிலை என்று திருத்தந்தை தெளிவாகச் சொல்கிறார். ஏழைகளுக்கு இந்த உரிமையை மறுப்பது, அவர்களின் தவிர்க்க இயலாத மாண்போடு வாழ்வதற்கு இருக்கும் உரிமையை மறுப்பதாகும் (30).

பல்வகை உயிரினங்களின் இழப்பு: ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தாவரங்களும், விலங்கு வகைகளும் மறைந்து போவதாகத் தெரிகிறது. இவற்றை நாம் ஒருபோதும் அறியாமல் இருப்போம். நம் குழந்தைகளும் ஒருபோதும் இவற்றைப் பார்க்க மாட்டார்கள். ஏனெனில் இவை எக்காலத்துக்கும் இழக்கப்பட்டதாகிவிடும் (33). இவை வளத்தை எவ்விதத்திலும் சுரண்டுவதாக இருக்காது, ஆனால், அவை தன்னிலே மதிப்புள்ளவை மற்றும் அவற்றுக்கு மதிப்பு உண்டு. மனிதரால் ஆக்கப்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அறிவியலாளர்களும், பொறியியலாளரும் எடுத்துவரும் பாராட்டுக்குரிய முயற்சிகளுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள். ஆயினும், மனிதத் தலையீடு, நிதி மற்றும் நுகர்வியலின் சேவைக்கு உட்படும்போது, இது உண்மையிலேயே நம் பூமியை வளமையும், அழகும் குன்றியதாக ஆக்கும், வறட்சிக்கும் உட்படுத்தும் (34).

மனித வாழ்வின் தரத்தில் தேய்வும், சமுதாயத்தின் சீரழிவும்: அனைத்துலக உறவுகளின் நன்னெறிகள் வரைச்சட்டத்தின் அடிப்படையில், ஓர் “உண்மையான இயற்கையியல் கடன்’“ (51) இந்த உலகில், எல்லாவற்றுக்கும் மேலாக, உலகின் வடக்கு தெற்கை மதிக்கும் விடயத்தில் எவ்வாறு நிலவுகின்றது என்பதை இத்திருமடல் சுட்டிக்காட்டுகின்றது. காலநிலை மாற்றத்தின்முன், இன்றியமையாத கடமையுணர்வுகள் (52) உள்ளன, அதிலும் வளர்ந்த நாடுகளுக்கு இவை அதிகமாகவே உள்ளன.

இந்த விவகாரங்கள் பற்றிய ஆழமான வேறுபாடுகளை உணர்ந்து, பல மக்கள்மீது இந்நிலை சுமத்தும் துன்பத்தைப் போக்குவதற்குக் கிடைக்கும் குறைவான முயற்சிகளைக் கண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டுகிறார். நேர்மறையான எடுத்துக்காட்டுகள் குறைவுபடவில்லையெனினும் (58), தன்னிறைவும், மகிழ்வான கவனமின்மையும் மேலோங்கி நிற்கின்றது (59). வாழ்வுமுறையையும், உற்பத்தியையும், நுகர்வுத்தன்மையையும் (59) மாற்றுவதற்கு விருப்பம் காட்டும் அவசியமான கலாச்சாரம் குறைபடுகின்றது (53). ஆனால், இயற்கை அமைப்புகளைப் பாதுகாப்பதற்கு உறுதி செய்யும் சட்டமுறையான வரைவுத்திட்டத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன (53).

பிரிவு 2 - படைப்பின் நற்செய்தி

முந்தையப் பிரவில் விளக்கப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, யூத-கிறிஸ்தவ மரபிலிருந்து வருகின்ற, புரிந்துகொள்ளக்கூடிய கண்ணோட்டத்தை வழங்குகிறார். படைப்பு மீது மனித சமுதாயத்திற்கு இருக்கும் அளவற்ற கடமை (90), படைப்புக்களுக்குள் இருக்கும் ஆழமான தொடர்பு மற்றும், இயற்கைச் சுற்றுச்சூழல், மனித சமுதாயத்தின் பொதுச் சொத்து, இதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது (95) என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்.

விவிலியத்தில், விடுதலையளித்து மீட்கும் இறைவனே, இந்தப் புவியைப் படைத்த இறைவன். இறைவனின் இந்த இரு வழிகளும் செயல்படும் முறை ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை, நெருக்கமானவை (73). படைப்பு வரலாறு, மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றிச் சிந்திப்பதற்கும், பாவம், அனைத்துப் படைப்பின் சமநிலையை எவ்வாறு உடைக்கிறது என்பதைச் சிந்திப்பதற்கும் மையமாக உள்ளது. இறைவன், நம் அடுத்திருப்பவர், இப்பூமி ஆகிய மூன்றும் மனித வாழ்வுக்கு அடிப்படை. மேலும், இம்மூன்றோடும் மனித வாழ்வு நெருக்கமான பின்னிப் பிணைந்த உறவைக் கொண்டுள்ளது என்பதையும் இந்த விவிலியப் பகுதிகள் விளக்குகின்றன. விவிலியத்தின்படி, இந்த மூன்று முக்கிய உறவுகள் வெளியிலும், நமக்குள்ளும் உடைபட்டுள்ளன. இந்த முறிவே பாவம் (66).

இதற்காக, கிறிஸ்தவர்கள்கூட, சிலநேரங்களில் மறைநூலைத் தவறாக விளக்குகின்றனர். நாம் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளோம் மற்றும் இப்பூமியை ஆளும் அதிகாரத்தைக் கொண்டுள்ளோம் என்பது, பிற படைப்புகள்மீது முழுவதுமாக ஆதிக்கம் செலுத்துவதற்கு இக்காலத்தில் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்தை நாம்  வலுக்கட்டாயமாகப் புறக்கணிக்க வேண்டும் (67). பிற படைப்புக்களின் அறுதி நோக்கம் நம்மில் காணப்படவில்லை என்பதை அறிந்தவர்களாய், உலகின் தோட்டத்தை உழுது கண்காணிக்க வேண்டிய கடமையை மனிதர்கள் கொண்டிருக்கின்றனர் (cf.தொ.நூ.2:15) (67). மாறாக, எல்லாப் படைப்புகளும் நம்மோடும், நம் வழியாகவும் இறைவனாகிய பொதுவான புள்ளியை அடைவதற்கு முன்னோக்கி நகர்கின்றன (83).

மனிதர், இந்தப் புவியின் முதலாளி அல்ல என்பது, வாழும் அனைத்து உயிர்களையும் ஒரே தளத்தில் வைக்கவேண்டும் என்று அர்த்தமல்ல. இது, மனிதர்களின் தனித்துவம் மிக்க மதிப்பையும், அவர்களுக்கு இருக்கும் அளப்பெரும் பொறுப்பையும் புறக்கணிப்பதாகும். மேலும், இந்தப் பூமியைப் புனிதமாக, இறைத்தன்மையோடு  நோக்குவதும், அதில் உழைத்து அதைப் பாதுகாக்க நம்மைத் தடை செய்யும் (90). இந்தக் கண்ணோட்டத்தில், எந்தப் படைப்புக்கும் இழைக்கப்படும் ஒவ்வொரு கொரடூரச் செயலும், மனித மாண்புக்கு முரணானது (92). இருந்தபோதிலும், நம் இதயங்களில் கனிவும், பரிவன்பும், நம் சக மனிதர்கள் மீது அக்கறையும் குறைவுபட்டால், பிற படைப்புகள் மீது நாம் கொண்டிருக்கும் ஆழமான ஒன்றிப்பு உண்மையானதாக இருக்காது (91).  ஒரே வானகத்தந்தையால் வாழ அழைக்கப்பட்டுள்ளோம், காணக்கூடாத பிணைப்பால் நாம் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளோம், நாம் அனைவரும் சேர்ந்து ஓர் உலகளாவிய குடும்பத்தை உருவாக்குகிறோம், இந்த மேலான உறவு, புனிதம், பாசம் மற்றும் தாழ்மையான மதிப்பை நம்மில் நிறைக்கின்றது என்ற ஓர் உலகளாவிய ஒன்றிப்பு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது (89).

இந்தப் பிரிவு, கிறிஸ்தவ வெளிப்பாட்டின் மையத்தோடு நிறைவடைகின்றது. இந்த உலகோடு உறுதியான, அன்புறவு கொண்டிருந்த இம்மண்ணுலக இயேசு, உயிர்த்து மகிமையில் உள்ளார். இவர் உலகின் ஆண்டவராக, படைப்பு முழுவதும் பிரசன்னமாகி இருக்கிறார் (100).

பிரிவு 3 - இயற்கையியல் பேராபத்திற்கு மனிதக் காரணங்கள்

இந்தப் பிரிவு, தற்போது காணப்படும் நிலையின் காரணங்களை, மெய்யியல் மற்றும் அறிவியல் துணைகொண்டு ஆய்வு செய்கிறது. இந்நிலையின் வெளி அடையாளங்களை மட்டுமல்ல, அவற்றின் ஆழமான காரணங்களையும் (15) ஆய்வு செய்கிறது.

தொழில்நுட்பம் குறித்த சிந்தனைகள் இந்தப் பிரிவின் துவக்கத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. வாழ்வுத் தரத்தை உயர்த்துவதில், தொழில் நுட்பங்கள் ஆற்றியுள்ள பங்கை நன்றியோடு ஒத்துக் கொள்கிறது. அதேவேளையில், அறிவுத் திறன் மிக்கோரும், பொருளாதார வலிமை பெற்றோரும் மனித சமுதாயத்தின் மீதும், ஒட்டுமொத்த உலகின் மீதும் ஆட்சி செய்வதற்கு, தொழில் நுட்பங்கள் துணைபோகின்றன (104). தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு ஆட்சி செய்யும் மனநிலை, இயற்கையை அழிப்பதற்கும், மக்களை, குறிப்பாக, மிகவும் வலுவிழந்த மக்களைச் சுரண்டுவதற்கும் இட்டுச் செல்கிறது. தொழில்நுட்ப ஆட்சி, பொருளாதார, அரசியல் துறைகளையும் ஆள்கிறது (109). முழுமனித முன்னேற்றம், அனைவரையும் இணைத்துக்கொள்ளும் சமுதாயம் இவற்றை வர்த்தகச் சந்தை உறுதி செய்யமுடியாது என்பதை நாம் உணரவிடாமல் தடுப்பது, இந்தத் தொழிநுட்ப ஆட்சி (109).

“அளவுக்கதிகமாக மனிதரை மையப்படுத்துவது, நவீன உலகம்” (116). இந்த உலகில் மனிதப் பிறவிகள் தங்களுடைய உண்மையான இடத்தை உணராமல், தாங்களும், தங்கள் சக்தியும் மையம் என்று எண்ணி வருகின்றனர். இதனால், "பயன்படுத்தி தூக்கியெறியும்" சிந்தனை உருவாகிறது. இந்த எண்ணம், சுற்றுச்சூழலையும், மனிதர்களையும் பொருள்களாகப் பாவித்து, தூக்கியெறிவதை நியாயப்படுத்துகிறது. இந்த எண்ணம், குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், வயது முதிர்ந்தோரை ஆதரவற்றவர்களாக விடுதல், பிறரை அடிமைகளாக பயன்படுத்துதல், மனித வர்த்தகம், தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லாதக் குழந்தையைக் கருவில் அழித்தல், மிருகங்களின் இன அழிவு ஆகியவற்றிற்கும் இட்டுச்செல்கிறது. இந்த எண்ணமே போதைப்பொருள் விற்பனையிலும், உடல் உறுப்பு வர்த்தகத்திலும் காணப்படுகிறது (123).

இந்தப் பின்னணியில், இத்திருமடல், இன்றைய உலகின் இரு முக்கியப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது. அனைத்திற்கும் மேலாக, தொழில்: மனிதர்களை விலக்கி வைக்காத முழுமையான இயற்கையியல், தொழிலின் முக்கியத்துவத்தை கணக்கில் இணைக்கவேண்டும் (124), ஏனெனில், குறுகிய கால இலாபத்திற்காக, மனிதர்கள் மீது முதலீடு செய்வதை நிறுத்திவிடுவது, தவறான வர்த்தகமாகும் (128).

இரண்டாவது பிரச்சனை, அறிவியல் முன்னேற்றத்துடன் தொடர்புள்ளது. இங்கு, GMO, அதாவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிர்கள் குறித்துப் பேசுகிறது (132-136). இது சிக்கலானச் சுற்றுச்சூழல் பிரச்சனை (135). இந்த மாற்றங்கள், உலகின் சில பகுதிகளில் பிரச்சனைகளைத் தீர்த்து, பொருளாதார வளர்ச்சியைக் கொணர்ந்திருந்தாலும், நல்ல விளைநிலங்கள் ஒரு சிலரது கரங்களில் குவிந்திருப்பது துவங்கி (134), ஏனையத் தொல்லைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை நாம் தவறாக எடைபோடக் கூடாது (134).

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறு விவசாயிகள், கிராமப்புற தொழிலாளிகள், பன்முக உயிர்கள், இயற்கை கட்டுமானங்கள் இவற்றைப் பற்றி குறிப்பாகச் சிந்தித்துள்ளார். எனவே, பரந்துபட்ட, பொறுப்பான, அறிவியல் மற்றும் கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவது அவசியம். நம்மிடம் உள்ளத் தகவல்கள் அனைத்தையும் திரட்டி, ஒவ்வொன்றையும் அடையாளப்படுத்தி நடத்தப்படும் கருத்துப் பரிமாற்றம் தேவை (135) என்று கூறியுள்ளார்.

பிரிவு  4 - ஒருங்கிணைக்கப்பட்ட இயற்கையியல்

திருமடல் தரும் பரிந்துரைகளின் இதயமாக விளங்குவது ஒருங்கிணைக்கப்பட்ட இயற்கை. இது ஒரு புது வழி நீதி. மனிதப் பிறவிகள் இவ்வுலகில் பெறவேண்டிய தனித்துவமான இடத்தை மதிக்கவும், நமது சுற்றுப்புறத்துடன் நாம் கொள்ளும் உறவை மதிக்கவும் இந்த இயற்கையியல் சொல்லித் தருகிறது. நம்மிடமிருந்து பிரிந்து, நாம் வாழ்வதற்கு ஒரு பின்புலமாக மட்டும் இயற்கையை கருதமுடியாது (139). பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், குறிப்பாக, அழியும் ஆபத்தில் உள்ள கலாச்சாரம், தினசரி வாழ்வு என்ற எல்லா தளங்களிலும் இந்த உண்மை உணரப்படவேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கண்ணோட்டம், நம் நிறுவனங்களில் இருக்கும் இயற்கையியலை செயலாக்குகிறது. அனைத்தும் தொடர்புடையவை. என்றால், சமுதாய நிறுவனங்கள் சுற்றுச்சூழலையும் மனித உயிரின் தன்மையையும் பாதிக்கின்றன. இந்த ஒருங்கிணைப்பிற்கு தீங்குவிளையும்போது, அது சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது (142).

சுற்றுச்சூழல் பிரச்சனைகளின் ஆய்வு, மனித, குடும்ப, பணித்தள ஆய்வுகளிலிருந்து பிரிக்க முடியாதது (141). சுற்றுச்சூழல் ஆபத்து, சமுதாய ஆபத்து என்று இருவகை ஆபத்துக்களை நாம் சந்திக்கவில்லை. இவை இரண்டுமே ஒரே சிக்கலான ஆபத்து (139).

மனித இயற்கையியல் பொதுநலனிலிருந்து பிரிக்கமுடியாதது (156). அநீதிகள் பெருகிவருகின்றன, அடிப்படை மனித  உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட வெண்டியவர்கள் என்ற கருத்துக்கு உள்ளாக்கப்படும் மனிதர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது (158). இச்சூழலில், மிகவும் வறுமைப்பட்ட சகோதர சகோதரிகளின் சார்பாக நம் அர்ப்பணத்தேர்வு இருக்க வேண்டும் (158). தன்னிலேயே இயங்கக்கூடிய ஓர் எதிர்காலத்தை, அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டுமானால், அது இன்றைய வறியோரைப் பேணுவதில் வெளிப்பட வேண்டும். இதை ஏற்கனவே திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார். ஒரு தலைமுறைக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்குவதோடு, தலைமுறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் அவசரமான நன்னெறித் தேவை (162).

ஒருங்கிணைந்த இயற்கையியல் ஒவ்வொரு நாள் வாழ்வைச் சார்ந்தது. இச்சுற்றுமடலில் நகரச்சூழல் குறித்து சிறப்பான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மனிதப் பிறவிகள், சூழ்நிலைக் கட்டுப்பாடுகளுக்கு மிகச் சிறந்த முறையில் பதிலுரைக்கும் சக்தி பெற்றவர்கள். தாறுமாறானச் சூழல்களிலும், தாங்கள் உருவாக்கும் வழிகளில் வாழப் பழகியவர்கள் மனிதப்பிறவிகள் (148). இருப்பினும், பொது இடங்கள், தங்குமிடம், போக்குவரத்து ஆகிய துறைகளில் இன்னும் ஏராளமான, உண்மையான முன்னேற்றம் தேவைப்படுகிறது (150-154).

மேலும், உலகமனைத்தையும் இறைவனின் கொடையாக, நமது பொதுவான இல்லமாக ஏற்றுக்கொள்வதற்கு, நமது உடலை இறைவனின் கொடை என ஏற்றுக்கொள்வது முக்கியம். இதற்கு மாறாக, நமது உடல்மீது நாம் அளவற்ற அதிகாரம் கொண்டிருப்பதாக நினைத்தால், படைப்பின்மீதும் நாம் அளவற்ற அதிகாரம் கொண்டிருப்பதாக எண்ணத் தூண்டும் (155).

பிரிவு 5 -  அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு வழிகள்

நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பிரிவு விவரிக்கின்றது. வெறும் ஆய்வுகள் போதுமானவை அல்ல. நமக்குச் செயல் திட்டங்கள் தேவை. உரையாடல் மற்றும் செயல்பாடுகள் தனிப்பட்ட நிலையிலும், பன்னாட்டு அளவிலும் உருவாக, செயல்திட்டங்கள் தேவை (15). நம்மைத் தற்போது அடுக்கடுக்காய் சூழ்ந்துவரும் அழிவிலிருந்து தப்பிக்க இதுவே சிறந்த வழி. நமது செயல்திட்டங்கள் மேலோட்டமான, ஏட்டளவான வழிகளில் உருவாகக் கூடாது என்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவனமாக உள்ளார். இதற்கு, உரையாடல் மிக அவசியம். உரையாடல் என்ற வார்த்தை, இந்தப் பிரிவு முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. "ஒரு சில சுற்றுச்சூழல் கேள்விகளுக்கு ஒத்தமைந்த ஒப்புதல் கிடைப்பது எளிதல்ல. அறிவியல் கேள்விகளுக்கு பதில் தருவதோ, அரசியலுக்கு மாற்றாக அமைவதோ திருஅவை எடுத்துக்கொள்ளும் பொறுப்பு அல்ல. அதேவேளையில், பொதுநலனை மனதில்கொண்டு, திறந்த மனதுடன், நேர்மையான முறையில் வாதங்களை மேற்கொள்வதை நான் ஊக்குவிக்கிறேன்" (188).

பன்னாட்டு முயற்சிகள் குறித்து தன் கருத்தை வெளியிட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அஞ்சவில்லை. "சுற்றுச்சூழலைக்குறித்து நடத்தப்பட்ட அண்மைய உச்சி மாநாடுகள், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை; அரசியல் மன உறுதி இல்லாததால், சுற்றுச்சூழல் குறித்த உலகளாவிய ஒப்பந்தங்கள் உருவாகவில்லை"(166). "அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அவசரமான, தேவையான முடிவுகள் எடுக்காமல் இருப்பதற்கு எது இவர்களைத் தூண்டுகிறது?" (57) இதற்குப் பதிலாக, உலக நிர்வாகத்திற்கு வடிவங்களும், கருவிகளும் தேவைப்படுகின்றன (175).  இதையே 'Pacem in Terris' (உலகில் அமைதி) என்ற சுற்றுமடல் துவங்கி, திருத்தந்தையர் கூறிவருகின்றனர். உலக நிர்வாகத்தின் ஒரு முக்கியக் கூறு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு. இதை, வரவு செலவு கணக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது. சுற்றுச்சூழல் என்பது, வர்த்தக சந்தையின் சக்தியால் காப்பாற்ற முடியாத ஒரு பொருள் (190).

ஐந்தாவது பிரிவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த மனம் கொண்ட, நேர்மையான, முடிவெடுக்கும் முறையைக் குறித்து அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார். உண்மையான, முழுமையான முன்னேற்றத்தைக் கொணரும் கொள்கைகளும், வியாபார முனைப்புகளும் எவை என்பதை உய்த்துணர இத்தகைய முடிவெடுக்கும் முறை உதவும் (185). புதிதாகத் துவக்கப்படும் வியாபார முயற்சிகள், சுற்றுச்சூழலை எவ்வகையில் பாதிக்கின்றன என்பது பற்றிய வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்கள் தேவை. இதற்கு மாறாக, சுற்றுச்சூழலுக்குப் பாதகமான வர்த்தக முயற்சிகளுக்கு, உத்தரவுகள் வழங்கப்படுவதற்குப் பின்னே இருக்கும் ஊழல்களும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் (182).

இந்தப் பிரிவில் மிக முக்கியமான வேண்டுகோள், அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு விடப்பட்டுள்ளது. இன்றைய உலகில் பெருமளவு நிலவும் 'திறமையானவை' 'உடனடியானவை' (181) என்ற மனநிலையைத் தவிர்க்கவேண்டும் என்று இவ்விண்ணப்பம் கூறுகிறது. அரசியல் அதிகாரிகள் துணிவுமிக்கவர்களாக இருந்தால், கடவுள் அவர்களுக்கு வழங்கியுள்ள இந்த உயர்நிலைக்கு ஏற்றவாறு நடந்து, சுயநலமற்ற பொறுப்பு என்பதற்கு ஒரு சாட்சியத்தை விட்டுச் செல்வர் (181).

அத்தியாயம் 6 -  இயற்கையியல் சார்ந்த கல்வியும் ஆன்மீகமும்

இறுதிப் பிரிவு, இயற்கையியல் சார்ந்த மனமாற்றத்தை நோக்கி அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. கலாச்சார ஆபத்து மிக ஆழமானது, பழக்க வழக்கங்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. கல்வியும் பயிற்சியும் மிக முக்கியமான சவால்கள். "தூண்டுதலும் கல்விமுறையும் இன்றி மாற்றங்கள் இயலாத ஒன்று"(15). அனைத்துக் கல்வித் துறைகளும் இதில் ஈடுபட்டுள்ளன. சிறப்பாக, 'பள்ளியில், குடும்பத்தில், தொடர்பு சாதனங்களில், மறைக்கல்வியில், வேறு இடங்களில்' (213).

'ஒரு புது வாழ்வுமுறையைக் குறிவைப்பது' (203-208) என்பதே ஆரம்பப் புள்ளி. இந்த ஆரம்பப் புள்ளியிலிருந்து, அரசியல், பொருளாதார, சமூக சக்தி கொண்டோர்மீது நலமான அழுத்தத்தை உருவாக்க முடியும் (206). "பொருட்களை வாங்குவோர் செய்யும் தேர்வுகள், வர்த்தக நடைமுறைகளில் மாற்றங்களைக் கொணரும். தொழில் உற்பத்தி, சுற்றுச்சூழல் மீது பதிக்கும் காலடித் தடங்களை மறுபரிசீலனை செய்ய அவர்களைக் கட்டாயப்படுத்தும்" (206).

சுற்றுச்சூழல் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதொன்றுமில்லை. இக்கல்வி, தண்ணீர் பயன்பாட்டைக் குறைப்பது, கழிவுகளைத் தனித்தனியேப் பிரிப்பது, 'தேவையற்ற விளக்குகளை அணைப்பது' (211) போன்ற நமது தினசரி பழக்க வழக்கங்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட இயற்கையியல் என்பது, வன்முறை, சுரண்டல், தன்னலம் என்ற எண்ண ஓட்டங்களை உடைக்கும் தினசரி செயல்பாடுகளில் அடங்கியுள்ளது (230). நம்பிக்கையிலிருந்து பிறக்கும் ஆழ்நிலைப் பரவசம் கொள்ளும் பார்வை இருந்தால், அனைத்தும் எளிதாகும். "நம்பிக்கை உள்ளவர்களாக, வெளியிலிருந்து அல்ல, உள்ளிருந்து உலகைக் காண்கிறோம். உலகின் அனைத்துப் படைப்புக்களோடும் தந்தை நமக்களித்துள்ள பிணைப்பை உணர்கிறோம். இறைவன் தந்த நமது தனித்துவத்தை வளர்ப்பதால், இறையியல் சார்ந்த மனமாற்றம் பெற்று, படைப்பாற்றலில் வளர்வோம்" (220).

'நற்செய்தியின் மகிழ்வு' (Evangelii Gaudium) என்பதில் கூறப்பட்டிருப்பதுபோல், சுதந்திரமாக, மனதார வாழும் தன்னடக்கம், விடுதலைத் தரும் (223), நம்மைக் கீழ்மைப்படுத்தும் சில தேவைகளை எவ்விதம் கட்டுப்படுத்துவது என்பதை அறிவதே மகிழ்வு. இதனால் வாழ்வு வழங்கும் வேறுபட்ட சாத்தியங்களுக்கு நம்மையே திறந்தவர்களாக்குகிறோம் (223). இவ்வழியில், நமக்கு மற்றவர்கள் தேவை என்பதையும், நம் அனைவருக்கும் இவ்வுலகின்மீது பொறுப்பு உள்ளது என்பதையும் உறுதியாக உணர்வோம் (229).

நமது பயணத்தில் புனிதர்கள் நமக்குத் துணையாக வருகின்றனர். நலிந்தோரைக் காப்பதற்கும், ஒருங்கிணைக்கப்பட்ட இயற்கையில் உண்மையான மகிழ்வுடன் வாழ்வதற்கும் ஈடு இணையற்ற எடுத்துக்காட்டு புனித பிரான்சிஸ் (10). இயற்கைமீது அக்கறை, வறியோருக்கு நீதி, சமுதாயத்திற்கு அர்ப்பணம், உள்ளார்ந்த அமைதி ஆகிய அனைத்திற்கும் உள்ள பிணைப்பை வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டு அவரே (10). இந்தத் திருமடல், புனித பெனடிக்ட், லிசியு நகர் புனித தெரேசா, அருளாளர் Charles de Foucauld ஆகியோரையும் குறித்துப் பேசுகிறது.

'Laudato Si'யினால் தூண்டப்பட்டு மேற்கொள்ளப்படும் முறையான ஆன்ம ஆய்வு, ஒரு புதிய பரிமாணத்தை உள்ளடக்கவேண்டும். ஒருவர், கடவுளோடும், மற்றவரோடும், தன்னோடும் எவ்வகை உறவில் உள்ளார் என்பது மட்டுமல்ல, உலகப் படைப்புகள் அனைத்தோடும், இயற்கையோடும் எவ்வகை உறவில் வாழ்கிறார் என்பதையும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

பொருளடக்கம்

உமக்கேப் புகழ், என் ஆண்டவரே (1-2)

இவ்வுலகில் எதுவும் நம்மை அலட்சியப்படுத்துவதில்லை (3-6)

ஒரே ஆதங்கத்தில் இணைக்கப்பட்டு (7-9)

அசிசி நகர் புனித பிரான்சிஸ் (10-12)

எனது விண்ணப்பம் (13-16)

பிரிவு 1 நமது பொதுவான இல்லத்திற்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது (17-61)

  1. மாசுக்கேடும் காலநிலை மாற்றமும் (20-26)
    • , கழிவு, தூக்கியெறியும் கலாச்சாரம் (20-22)

பொதுவான நன்மையாக காலநிலை (23-26)

  1. தண்ணீர் விவகாரம் (27-31)
  2. பல்வகை உயிரினங்களின் இழப்பு (32-42)
  3. மனித வாழ்வின் தரத்தில் தேய்வும், சமுதாயத்தின் சீரழிவும் (43-47)
  4. உலகளாவிய ஏற்றத்தாழ்வு (48-52)
  5. சக்தியற்ற பதிலிறுப்புகள் (53-59)
  6. பல்வேறுபட்ட கருத்துக்கள் (60-61)

பிரிவு 2 படைப்பின் நற்செய்தி (62-100)

  1. விசுவாசம் வழங்கும் ஒளி (63-64)
  2. விவிலியத்தின் ஞானம் (65-75)
  3. பிரபஞ்சத்தின் மறைபொருள் (76-83)
  4. படைப்பு என்ற இணைப்பில், ஒவ்வொரு படைப்பின் செய்தி (84-88)
  5. பிரபஞ்சத் தொடர்பு (89-92)
  6. படைப்புக்களின் பொதுவான முடிவு (93-95)
  7. இயேசுவின் பார்வை (96-100)

பிரிவு 3 இயற்கையியல் பேராபத்திற்கு மனித காரணங்கள் (101-136)

  1. தொழில் நுட்பம்: படைப்பாற்றலும் சக்தியும் (102-105)
  2. தொழில்நுட்ப ஆட்சியின் உலகமயமாக்கல் (106-114)
  3. நவீன மனித மையத்தின் பேராபத்தும், விளைவுகளும் (115-121)

செயல்முறை நிரந்தரமற்றதனம் (122-123)

வேலைவாய்ப்பைக் காக்கும் அவசியம் (124-129)

புதிய உயிரியல் தொழில்நுட்பம் (130-136)

பிரிவு 4  ஒருங்கிணைக்கப்பட்ட இயற்கையியல் (137-162)

  1. சுற்றுச்சூழல், பொருளாதார, சமுதாய இயற்கையியல் (138-142)
  2. கலாச்சார இயற்கையியல் (143-146)
  3. தினசரி வாழ்வில் இயற்கையியல் (147-155)
  4. போதுனலனின் கொள்கை (156-158)
  5. தலைமுறைகளுக்கிடையே நீதி (159-162)

பிரிவு 5  அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு வழிகள் (163-201)

  1. பன்னாட்டு சமுதாயத்தில் சுற்றுச்சூழல் குறித்த உரையாடல் (164-175)
  2. புதிய தேசிய மற்றும் உள்ளூர் கொள்கைகளுக்காக உரையாடல் (176-181)
  3. முடிவெடுக்கும் முறையில் உரையாடலும், வெளிப்படையும் (182-188)
  4. மனித நிறைவுக்காக அரசியலும் பொருளாதாரமும் (189-198)
  5. அறிவியலோடு உரையாடல் கொள்ளும் மதங்கள் (199-201)

பிரிவு 6 இயற்கையியல் சார்ந்த கல்வியும் ஆன்மீகமும் (202-246)

  1. ஒரு புது வாழ்வு முறை நோக்கி (203-208)
  2. மனித சமுதாயத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையே உடன்படிக்கை உருவாக கற்பித்தல் (209-215)
  3. இயற்கையியல் சார்ந்த மனமாற்றம் (216-221)
  4. மகிழ்வும் அமைதியும் (222-227)
  5. சமுதாய, அரசியல் அன்பு (228-232)
  6. அருளடையாளக் குறியீடுகளும், ஓய்வின் கொண்டாட்டமும் (233-237)
  7. மூவொரு இறைவனும் படைப்புக்களின் தொடர்பும் (238-240)
  8. அனைத்துப் படைப்பின் அரசி (241-242)
  9. சூரியனைத் தாண்டி (243-246)

உலகிற்காக ஒரு செபம்

படைப்புடன் இணைந்து ஒரு கிறிஸ்தவ செபம்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.