2015-06-18 17:00:00

திருத்தந்தையின் திருமடலுக்கு அமெரிக்க கத்தோலிக்கர் ஆதரவு


ஜுன்,18,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களில் 68 விழுக்காட்டினர் பூமி வெப்பமடைந்து வருகிறது என்றும்,  அந்நாட்டின் கத்தோலிக்கர்களில் 71 விழுக்காட்டினர் இந்த உண்மையை ஆதரிப்பதாகவும் அந்நாட்டிலிருந்து வெளியான ஆய்வு ஒன்று கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் "இறைவா! உமக்கே புகழ்: நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட திருமடல், இவ்வியாழனன்று வத்திக்கானில் வெளியிடப்படுவதையொட்டி அமெரிக்காவின் Pew என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விவரங்கள் வெளியாயின என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இப்புதனன்று வெளியான இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர்களில் 86 விழுக்காட்டினர் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழ்ந்த அன்பும், மரியாதையும் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பூமி வெப்பமடைந்து வருவது ஒரு ஆபத்தான விடயம் என்றும், இந்த ஆபத்திற்கு மனிதர்களே முக்கிய காரணம் என்றும் அமெரிக்கக் கத்தோலிக்கர்கள், குறிப்பாக, இஸ்பானிய வம்சாவழி கத்தோலிக்கர்கள் நம்புவதாக Pew ஆய்வு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.