2015-06-18 16:41:00

டுவிட்டர் செய்திகளாக புதிய திருமடலின் கருத்துக்கள்


ஜூன்,18,2015. "நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல் என்பதில் நாம் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியாக வெளியானது.

'இறைவா உமக்கே புகழ் : நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்' என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள திருமடல் இவ்வியாழனன்று வெளியானதைத் தொடர்ந்து, 20 நிமிடங்களுக்கு ஒரு டுவிட்டர் செய்தியை திருத்தந்தை வெளியிட்டு வந்தார்.

இந்த வரிசையில், "பூமிக்கோளத்தின் எதிர்காலத்தை நாம் எவ்விதம் உருவாக்குகிறோம் என்பது குறித்த உரையாடலை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்று நான் விண்ணப்பிக்கிறேன்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியானது.

மேலும், திருத்தந்தை அவர்கள் எழுதிய திருமடல் உலகின் அனைத்து ஆயர்களுக்கும் இரு நாட்களுக்குமுன் அனுப்பப்பட்டதென்றும், ஒவ்வொரு பிரதியிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கைப்பட எழுதிய ஒரு சில வரிகளும் இணைத்து அனுப்பப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஒன்றிப்பு, பிறரன்பு, அமைதி ஆகியவற்றால் பிணைக்கப்பட்டு ஆயர்களாக வாழும் அன்பு சகோதரர்களே, என் ஆசீருடன் இணைந்துவரும் 'இறைவா, உமக்கே புகழ்' என்ற திருமடலை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை கைப்பட எழுதிய செய்தியாக இருந்தது.

திருத்தந்தையின் திருமடல், இத்தாலிய மொழியில் 75,000 பிரதிகளும், ஏனைய மொழிகளில் 10,000 பிரதிகளும் தற்போதைக்கு அச்சிடப்பட்டுள்ளன என்று வத்திக்கான் பதிப்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.