2015-06-17 15:42:00

முதுபெரும் தந்தை இலஹாம்- சிறுமந்தை ஆற்றக்கூடிய பணிகள் அதிகம்


ஜூன்,17,2015. கிறிஸ்தவ மறை பிறந்து வளர்ந்த பூமியில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவது வேதனை தரும் உண்மை எனினும், இந்தச் சிறுமந்தை ஆற்றவேண்டிய பணிகள் அதிகம் என்று, கிரேக்க மேல்கத்திய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, 3ம் கிரகரி இலஹாம் அவர்கள் கூறினார்.

ஜூன் 15, இத்திங்களன்று, கிரேக்க மேல்கத்திய ஆயர் மாமன்றம், லெபனானின் Ain Trez நகரில் துவங்கியபோது, முதுபெரும் தந்தை இலஹாம் அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

எண்ணிக்கையில் குறைந்துள்ள ஒரு மந்தையாக மாறியுள்ள கிறிஸ்தவர்கள், புளிக்காரமாகச் செயலாற்றி, கிறிஸ்தவ விழுமியங்களை இம்மண்ணில் பரப்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்று முதுபெரும் தந்தை இலஹாம் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

மத்தியக் கிழக்குப் பகுதிகளில் வாழும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்கள் சிந்தும் இரத்தம், கிறிஸ்தவ ஒன்றிப்பு இரத்தம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய முதுபெரும் தந்தை இலஹாம் அவர்கள், ஒற்றுமையையும், உரையாடலையும் வளர்ப்பது  கிறிஸ்தவர்களின் தலையாய அழைப்பு என்று கூறினார்.

திங்களன்று துவங்கிய கிரேக்க மேல்கத்திய ஆயர்கள் மாமன்றம், துயர் துடைப்புப் பணிகள் குறித்தும், அக்டோபர் மாதம் வத்திக்கானில் கூடவிருக்கும் ஆயர் மாமன்றத்தின் மையப் பொருளான குடும்பம் குறித்தும் விவாதித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.