2015-06-17 16:32:00

போர்ச்சூழல்களில் குழந்தைகள் நிலை - ஐ.நா. உயர் அதிகாரி


ஜூன்,17,2015. 2014ம் ஆண்டு, மோதல்களால் பாதிக்கப்பட்ட 23 இடங்களில், பல இலட்சம் குழந்தைகள், எவ்வித பாதுகாப்பும் இன்றி, பெரும் துன்பங்களை அனுபவித்துள்ளனர் என்று, ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மோதல் சூழல்களில் வாழும் குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஐ.நா.அவை உருவாக்கியுள்ள ஓர் அமைப்பின் சிறப்புச் செயலர், Leila Zerrougui அவர்கள், ஐ.நா. வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பொதுவாக, மோதல்கள் உருவாகும்போது, வயதுவந்த பெரியவர்கள் ஆயுதம் தாங்கி போரிடுவது வழக்கம் என்றாலும், அண்மையக் காலங்களில், அடிப்படை வாதக் குழுக்கள், எவ்விதக் காரணமுமின்றி, குழந்தைகள் பயிலும் பள்ளிகளைத் தங்கள் தாக்குதல்களுக்கு இலக்காக்கி வருகின்றனர் என்று சிறப்புச் செயலர் Zerrougui அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ISIL குழுக்களாலும், போக்கோ ஹாரம் குழுக்களாலும் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளில் குழைந்தைகளின் நிலை நாளுக்குநாள் மோசமாகி வருகின்றது என்று, ஐ.நா. அதிகாரி, Zerrougui அவர்கள், கவலை வெளியிட்டார்.

இவையல்லாமல், சிறுவர், சிறுமியரை கட்டாயப்படுத்தி, போர்ச்சூழல்களில் பயன்படுத்துவது, எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு குற்றம் என்று சிறப்புச் செயலர், Zerrougui அவர்கள் கண்டனம் தெரிவித்தார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.