2015-06-17 16:10:00

திருமடலில் திருத்தந்தை - மக்களின் மேய்ப்பராகப் பேசப்போகிறார்


ஜூன்,17,2015. சுற்றுச் சூழலையும் இயற்கையையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடவிருக்கும் திருமடலில், அவர் ஓர் அறிவியல் நிபுணராகவோ, அரசியல்வாதியாகவோ பேசப்போவதில்லை, மாறாக, மக்களின் மேய்ப்பராகப் பேசப்போகிறார் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில், அமெரிக்க ஆயர்கள் பேரவையின் வசந்தகாலக் கூட்டம் நடைபெற்றபோது, திருத்தந்தை வெளியிடவிருக்கும் திருமடல் குறித்த கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இவ்வமர்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மயாமி பேராயர் தாமஸ் வென்ஸ்கி அவர்கள், திருத்தந்தையரும், ஆயர்களும், இயற்கை குறித்த கவலைகளை, பொருளுள்ள வகையில் வெளியிட்டு வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஆபத்துக்களுக்கு, உலகில் வாழும் வறியோர், பெருமளவில் காரணமாக இல்லாதபோது, இந்த ஆபத்துக்களால் அவர்களே பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று, பேராயர் வென்ஸ்கி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்தும் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் வசந்தகாலக் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.