2015-06-17 16:00:00

சிரியாவில் நம்பிக்கை இன்னும் இறக்கவில்லை - ஆயர் Khazen


ஜூன்,17,2015. நம்பிக்கை இன்னும் இறக்கவில்லை, ஆனால், சந்தேகங்கள் பரவலாக வளர்ந்து வருகின்றன என்று அலெப்போ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Georges Abou Khazen அவர்கள் கூறினார்.

சிரியாவுக்கென ஐ.நா.அவை நியமித்துள்ள சிறப்புத் தூதர், Staffan de Mistura அவர்கள், இத்திங்களன்று தமஸ்கு நகரை அடைந்திருக்கும் நிலையில், அவர் மேற்கொள்ளவிருக்கும் அமைதிப் பணிகள் குறித்து பேசிய ஆயர் Khazen அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஐ.நா.வின் சிறப்புத் தூதர் வருகை தந்திருப்பது ஆறுதலாக இருந்தாலும், அவரால் சிரியாவில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொணர முடியுமா என்ற ஐயம் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று ஆயர் Khazen அவர்கள் எடுத்துரைத்தார்.

சிரியாவில் போராடிவரும் கும்பல்களில் பெரும்பாலானோர் சிரியா நாட்டைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதால், அவர்கள், நாட்டின் அமைதி, நிலையான அரசு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டுள்ளனரா என்ற ஐயமே அதிகம் பரவியுள்ளது என்று அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Khazen அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சிரியாவிற்குள் கடத்திவரப்படும் ஆயுதங்களைத் தடுத்து நிறுத்துவதே, அந்நாட்டின் அமைதிக்கு எடுக்கப்பட வேண்டிய முதல் படி என்று ஆயர் Khazen அவர்கள் வலியுறுத்தினார்.

அரசுத் தலைவர் பஷார் அல்-ஆஸாத் அவருக்கு எதிராக 2011ம் ஆண்டு ஆரம்பமான போரினால், இதுவரை, 2,30,000த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், 32 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.