2015-06-16 15:13:00

மனித உரிமைகள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வலியுறுத்தல்


ஜூன்,16,2015. மனித உரிமைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதன் வழியாக குடிபெயரும் மக்களும், அம்மக்களை அனுப்புகின்ற மற்றும் அவர்களை வரவேற்கின்ற நாடுகள் உண்மையிலேயே பலன் அடைய முடியும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 29வது அமர்வில் குடிபெயரும் மக்கள் குறித்த கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார்.

குடிபெயரும் மக்களின் மனித உரிமைகளையும், மாண்பையும் ஊக்குவித்து மதிப்பதன் மூலம், சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதரின் உரிமைகளும், மாண்பும் முழுமையாய் மதிக்கப்படும் என்று கூறினார் பேராயர் தொமாசி.

குடிபெயரும் மக்களை வரவேற்கின்ற நாடுகளின் தேசிய பொருளாதாரத்திற்கும், சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கும், மக்கள் தொகைக்கும் அம்மக்கள் சுமையாக உள்ளனர் என்ற கருத்து நிலவுகிறது, ஆனால் கிடைத்துள்ள சான்றுகளின்படி, குடிபெயர்வோர் தேசிய கலாச்சாரத்திற்குப் புதிய மதிப்பீடுகளை வழங்குகின்றனர் என்று குறிப்பிட்டார் பேராயர் தொமாசி.

2013ம் ஆண்டில் இத்தாலியில் ஏறக்குறைய 4,97,000 புதிய தொழில்கள் வெளிநாட்டு குடிமக்களால் நடத்தப்பட்டன என்றும், ஐரோப்பாவில் கடந்த பத்து ஆண்டுகளில் குடிபெயரும் மக்களின் வேலைத்திறன் 70 விழுக்காடாக உள்ளது என்றும் கூறினார் பேராயர் தொமாசி.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின்(OECD) இக்கணிப்பைக் குறிப்பிட்ட பேராயர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலைத்திறன் அதிகரிப்பில் குடிபெயரும் மக்களின் பங்களிப்பு 47 விழுக்காடு என்றும் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.