2015-06-16 14:56:00

திருத்தந்தை, மால்ட்டா பிறரன்பு அமைப்பின் தலைவர் சந்திப்பு


ஜூன்,16,2015. மால்ட்டா கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின்(The Grand Master of the Sovereign Order of Malta) புரவலர் கர்தினால் Raymond Leo Burke, இந்த அமைப்பின் தலைவர் Fra' Matthew Festing ஆகிய இருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்தனர்.

வத்திக்கானில் திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மேலும், உலகின் பல பகுதிகளிலுள்ள புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோர் உட்பட பல்வேறு பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் இந்த அனைத்துலக மால்ட்டா அமைப்பு, “சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல” என்ற தலைப்பில், அனைத்துலக அளவில் புலம்பெயர்வோர்க்கு ஆதரவாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட உள்ளது.      

ஜூன்,20, வருகிற சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்வோர் தினத்தன்று இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக இடம்பெற்று வரும் சண்டையில், ஒவ்வொரு 60 வினாடிகளுக்கு ஒரு குடும்பம் வீதம் வீட்டை விட்டு வெளியேறுகின்றது, உலகில் ஏதாவது ஒரு பகுதியில் ஒவ்வொரு 3 வினாடிகளுக்கு ஒருவர் வீதம் புலம்பெயர்கின்றார் என்று இவ்வமைப்பு கூறியுள்ளது.

இன்று உலகில் 120 நாடுகளில் எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்கள் இந்த மால்ட்டா அமைப்பில் பணி செய்கின்றனர்.  

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.