2015-06-16 15:23:00

சிறுபான்மை மதத்தவரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் அவசியம்


ஜூன்,16,2015. இந்தியாவில் அதிகரித்துவரும் தீவிரவாத வன்முறை அச்சுறுத்தலிலிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்குத் தவறியுள்ளார் என்று கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்கள் கூறியுள்ளார்.

Aid to the Church in Need என்ற பன்னாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்கள், இந்துமதத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில் கிறிஸ்தவர்களையும், சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் அவசியம் என்று கூறினார்.

பிரதமர் மோடி அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதி, வாக்குறுதியாக மட்டுமே உள்ளது, எனினும், பிரதமர் மோடி அவர்களின் உரை, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பிற தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசின் அர்ப்பணத்துக்கு உறுதி அளிப்பதாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் டோப்போ.

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து வாழ்வது, நாட்டில் கிறிஸ்தவத்தின் இருப்புக்கு முக்கியமானது என்றும் கூறியுள்ளார் கர்தினால் டோப்போ.

இதற்கிடையே, கர்தினால் டோப்போ அவர்களுக்கு கடந்த வாரத்தில் விடுத்த மரண அச்சுறுத்தல் தொடர்பாக, சந்தேக நபர் ஒருவரை இத்திங்களன்று காவல்துறை கைது செய்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.  

ஆதாரம் :  ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.