2015-06-16 14:42:00

கடுகு சிறுத்தாலும்... நமக்குரிய அடையாளமும் மகிழ்வும்...


தன்னையே முன்னேற்றும் வழிகளைக் கற்றுத்தரும் பயிற்சிப் பாசறை ஒன்று நடந்தது. 200க்கும் அதிகமானோர் பங்கேற்ற அந்தப் பாசறையை வழிநடத்தியவர், தனது உரையை நடுவில் திடீரென நிறுத்தினார். பாசறையில் கலந்துகொண்டோருக்கு ஒரு பயிற்சியளிக்கப் போவதாகக் கூறினார். அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் காற்றடைக்கப்பட்ட ஒரு பலூன் கொடுக்கப்பட்டது. அந்தப் பலூன்களில் அவரவர் தங்கள் பெயர்களை பெரிதாக எழுதும்படி கூறினார், பயிற்சியாளர்.

பெயர்கள் எழுதப்பட்டப் பலூன்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அடுத்த அறையில் வைக்கப்பட்டன. பின்னர், பயிற்சியாளர், அரங்கத்திலிருந்தவர்களிடம், "நீங்கள் அனைவரும் அடுத்த அறைக்குள் சென்று, உங்கள் பெயர் எழுதப்பட்ட பலூனை எடுத்துவாருங்கள். உங்களுக்கு 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளன" என்று கூறினார்.

அரங்கத்தில் இருந்த அனைவரும், அடுத்த அறைக்குள் சென்று, அவசர, அவசரமாகத் தங்கள் பலூனைத் தேடினர். குறிப்பிட்ட 5 நிமிடங்களுக்குள் ஒருவரும் தங்கள் பெயர் எழுதப்பட்டப் பலூனைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

5 நிமிடங்கள் சென்றதும், அறையில் நுழைந்த பயிற்சியாளர், "சரி, இப்போது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு முன் இருக்கும் பலூனை எடுத்து, அதில் எழுதப்பட்டுள்ள பெயருக்கு உரியவரிடம் அதைக் கொடுங்கள்" என்று கூறினார். அடுத்த 5 நிமிடங்களுக்குள், ஒவ்வொருவரும் அவரவர் பெயர் எழுதப்பட்டிருந்த பலூனைப் பெற்றுக் கொண்டனர்.

அடுத்தவருக்குரிய அடையாளத்தையும், மகிழ்வையும் அவர்களுக்கு வழங்கும்போது, நமக்குரிய அடையாளமும், மகிழ்வும் தானாகவே நம்மை வந்தடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.