2015-06-16 15:03:00

அந்தியோக் சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையின் உரோம் பயணம்


ஜூன்,16,2015. அந்தியோக்கிய சீரோ ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Moran Mor Ignatius Aphrem II அவர்கள், இப்புதன் முதல் சனிக்கிழமை வரை உரோம் நகரில் பயணம் மேற்கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, திருத்தந்தையுடன் சேர்ந்து செபிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியோக்கிய சீரோ ஆர்த்தடாக்ஸ் சபையின் 123வது முதுபெரும் தந்தையாக 2014ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுபெரும் தந்தை 2ம் எப்ரேம் அவர்கள்,  இம்மாதம் 17 முதல் 20 வரை உரோம் நகரில் பயணம் மேற்கொள்வார்.

சீரோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை, அந்தியோக்கியாவில் வாழ்ந்த முதல் கிறிஸ்தவ சமூகத்திடமிருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது. இந்நகரில் புனிதர்கள் பேதுருவும், பவுலும் தங்கியிருந்துள்ளனர். இங்கிருந்தே ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் முதல் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் சென்றனர். தற்போது சீரோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை உலகெங்கும் 18 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் ஆறு இலட்சம் பேர் சிரியா, துருக்கி, ஈராக், லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ளனர். இன்னும், இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றனர்.

இந்தியாவில் இச்சபையினர் 12 இலட்சம் பேர் உள்ளனர். இந்திய சீரோ மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் மேதகு பசிலியோஸ் முதலாம் தாமஸ் அவர்கள் இப்பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்பார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.