2015-06-15 16:51:00

வேறுதீர்வுகள் எதுவும் இல்லாதபோதே முதியோர் இல்லம்-திருத்தந்தை


ஜூன்,15,2015. நம் ஆன்மாக்களை சிறைப்படுத்தும் தத்துவங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக, பெற்றோரும், குடும்பங்களும் எதிர்த்து நிற்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

உரோம் மறைமாவட்டம் ஏற்பாடு செய்த ஆன்மீக ஆண்டு கருத்தரங்கில் பங்குபெற வந்துள்ளோரை, ஞாயிறு மாலை, வத்திக்கான் பேதுரு வளாகத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு ஊழல்களால் துன்புறும் உரோம் நகருக்கு ஓர் ஆன்மீக மறுபிறப்பு தேவைப்படுகின்றது என்று எடுத்துரைத்தார்.

தவறான கொள்கைகளின் பாதிப்புக்களிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்பட, குடும்பங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நடவடிக்கைகள் இல்லையெனில், உன்னதக் கொள்கைகளின்றி வளரும் வருங்கால தலைமுறையால், மனித சமுதாயமும், நாடும், குடும்பங்களும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதென்று தெரிவித்தார்.

தவிர்க்கமுடியாதச் சூழல்களால் பெற்றோர்கள் பிரிய நேர்ந்தாலும், ஒருவர் மற்றவரைக் குறித்து ஒருநாளும் தவராகப் பேசாதீர்கள், ஏனெனில், பெற்றோரிடமிருந்தே குழந்தைகள் மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

குடும்பங்களில் வயதில் முதிர்ந்தோர் அன்பு கூரப்பட்டு, மதிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர் இல்லம் என்பது, வேறு தீர்வுகள் எதுவும் இல்லாதபோது, நாடப்படும் கடைசி புகலிடமாக இருக்கவேண்டும் என்றும் கூறினார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.