2015-06-13 15:20:00

மனித மாண்பையும், உறுதியான சமூகத்தையும் ஊக்கப்படுத்துங்கள்


ஜூன்,13,2015. இத்தாலிய நீதித்துறை உயர் அவையின் 200 உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசு அதிகாரிகள், மனிதரின் நலனையும், சமூகத்தின் நிலையான தன்மையையும் ஊக்கப்படுத்துவது இன்றியமையாதது என்று கூறினார்.

உலகத் தாராளமயமாக்கல், குழப்பத்தையும், சிதறிய குறிக்கோளையும் தன்னோடு கொண்டிருந்து, சமூகக் கட்டமைப்புக்குப் புறம்பான கூறுகளையும், விதிமுறைகளையும், பழக்கங்களையும் புகுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு அதிர்ச்சியை அளிக்கும் இத்தகைய சூழலில், மனிதர் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு அவசியமான உறுதியான சமூகத்தை அமைப்பது அரசு அதிகாரிகளின் கடமை என்பதையும் கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சட்டம் மீறப்படும்போது அதில் தலையிட நீதிபதிகள் அழைக்கப்படுகின்றனர் என்றும், நீதி வழங்கும்போது இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதரின் மதிப்பில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட இந்த நீதித்துறை அவையின் உதவித் தலைவர் Vittorio Bachelet அவர்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, கிறிஸ்தவ நீதிபதியான இந்த மனிதரின் சாட்சிய வாழ்வு, நீதித்துறையின் உறுப்பினர்களைத் தொடர்ந்து வழிநடத்தட்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.