2015-06-13 15:27:00

திருத்தந்தை வருகிற நவம்பரில் ஆப்ரிக்காவுக்குத் திருப்பயணம்


ஜூன்,13,2015. வருகிற நவம்பரில் ஆப்ரிக்காவுக்கு, குறிப்பாக, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, உகாண்டா, முடிந்தால் கென்யா ஆகிய நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இவ்வெள்ளி மாலையில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் ஜான் லாத்தரன் பசிலிக்காவில் நடைபெறும் மூன்றாவது உலக அருள்பணியாளர் தியானத்தில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய ஆயிரம் அருள்பணியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த திருத்தந்தை, ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணம் பற்றிய கேள்விக்குப் பதில் கூறியபோது இவ்வாறு கூறினார்.

இறைவன் விரும்பினால் வருகிற நவம்பரில் ஆப்ரிக்காவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அரசுத்தலைவர் மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் அங்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

உகாண்டாவில் 22 மறைசாட்சிகள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வு முடிந்திருந்தாலும், சற்று தாமதமாக அங்குச் செல்வதாகவும் தெரிவித்த திருத்தந்தை, கென்யா செல்வது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

உகாண்டாவில் 1880களில் 22 பேர் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொலை செய்யப்பட்டனர். இம்மறைசாட்சிகளை 1964ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி புனிதர்கள் என்று அறிவித்தார் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல்.

இஞ்ஞாயிறன்று நிறைவடையும் இந்த மூன்றாவது உலக அருள்பணியாளர் தியானத்தில் 5 கண்டங்களிலிருந்து 90 நாடுகளின் ஏறக்குறைய ஆயிரம் அருள்பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.