2015-06-13 15:06:00

கடுகு சிறுத்தாலும் – வருங்காலம் விடுக்கும் கேள்விக் கணைகள்


பூமிக்கோள உச்சி மாநாடு (The Earth Summit) 1992ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ (Rio de Janeiro) நகரில், முதல் முறை நடைபெற்றபோது, Severn Cullis Suzuki என்ற 12 வயது சிறுமி, உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள் பேசினார். அச்சிறுமியின் சொற்கள் உலகத் தலைவர்களின் உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. சிறுமி Severn சொன்ன ஒரு சில உண்மைகளுக்கு மீண்டும் செவி மடுப்போம்:

“நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.

இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி Severn Suzuki, அவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினாள். அன்று அம்புகளாய் அத்தலைவர்களை நோக்கிப் பாய்ந்த அக்கேள்விகள் இன்று நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.

“நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப் பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.

இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.

காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.

உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.”

அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, சங்கடமான கேள்விகளை விட்டுச் சென்றாள் அந்தச் சிறுமி. இது நடந்து இப்போது 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. Severn Suzuki அன்று எழுப்பிய அந்தக் கேள்விகள், இன்றும் நமக்கு எழுப்பப்படுகின்றன. இக்கேள்விக் கணைகள் நம்மீது பாயும்போது, நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.