2015-06-12 16:26:00

ரூ.1,400 கோடியில் சூரிய மின் உற்பத்தி திட்டம்


ஜூன்,12,2015. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,400 கோடி ரூபாய் முதலீட்டில் 200 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் பூங்காவை அமைக்க தமிழக அரசுடன் அதானி குழுமம் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது.

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (TANGEDCO) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விரைவில் தமிழகத்தில் 1000 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் தொழிற்சாலையைத் தொடங்குவது குறித்தும் மாநில அரசுடன் அதானி குழுமம் ஆலோசனை நடத்தி வருகிறது.

200 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் இவ்வாரத்தில் கையெழுத்தாகியது. ஒரு மெ.வா மின்சார உற்பத்திக்கு ரூ.6.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை முதலீடு செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தியை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தமிழக அரசு 5% உற்பத்தியை மட்டுமே அடைந்துள்ளது.

தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012-ல் ஆண்டுக்கு 1000 மெகவாட்டாக மூன்றாண்டுகளில் மூவாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பு மற்றும் உள்நாட்டிலேயே சூரிய ஆற்றல் கருவிகளை உருவாக்கிடும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கை முன்மொழியப்பட்டது.

மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரத்தில் கடந்த மே மாதம் வரை சூரிய மின் பூங்காக்கள் தொடங்கப்பட்ட வகையில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.