2015-06-12 16:26:00

தமிழகத்தில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது


ஜூன்,12,2015. உலகில் அனைத்துச் சிறாருக்கும் தரமான கல்வி வழங்குவது உறுதி செய்யப்படுவதே, சிறார் தொழில்முறையை ஒழிப்பதற்குச் சிறந்த யுக்தியாக இருக்கும் என்று, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் யூனிசெப் தலைவர் Job Zachariah அவர்கள் தெரிவித்தார்.

அனைத்துலக சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தினமான ஜூன் 12, இவ்வெள்ளியன்று, இவ்வாறு கூறிய Job Zachariah அவர்கள், அனைத்துச் சிறாரும் தவறாமல் பள்ளிக்குச் செல்வது உறுதி செய்யப்பட்டால், நாட்டில் சிறார் தொழிலாளர்களே இருக்க மாட்டார்கள் என்றும் கூறினார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்(MHRD) ஆய்வறிக்கையின்படி, தமிழகத்தில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது என்றும், 2014ம் ஆண்டில் பள்ளிப்படிப்பை இடையிலே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. 6 வயதுக்கும் 14 வயதுக்கும் உட்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது 99.3 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வுலக நாளில், ILO உலக தொழில் நிறுவனமும், உலகெங்கும் சிறார்க்குத் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்டுள்ளது.

2002ம் ஆண்டிலிருந்து ஜூன் 12ம் தேதி உலக சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

‘குழந்தைத் தொழில் முறையைத் தவிர்ப்போம், தரமான கல்வியை ஊக்குவிப்போம்’ என்ற தலைப்பில் 2015ம் ஆண்டின் இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : Indian Express / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.