2015-06-12 16:15:00

குடும்ப அமைப்புமுறையைக் காப்பதற்கு ஆப்ரிக்க ஆயர்கள் உறுதி


ஜூன்,12,2015. ஆப்ரிக்காவில் திருஅவையின் பணியை ஊக்குவிப்பதற்கும், குடும்ப அமைப்பு முறையைப் பாதுகாப்பதற்கும் அக்கண்டத்தின் கத்தோலிக்கத் திருஅவை, நம்பிக்கைக்குரிய ஒரே குரலாக இணைந்து செயல்படுவதற்குத் தீர்மானித்துள்ளது என்று ஆப்ரிக்க ஆயர்கள் தெரிவித்தனர்.

திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் பேராயத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் இச்செவ்வாயன்று கானா நாட்டில் திருஅவைத் தலைவர்களுக்கு ஆற்றிய உரைக்குப் பின்னர் இவ்வாறு ஆப்ரிக்க ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

வருகிற அக்டோபரில் வத்திக்கானில் குடும்பம் குறித்து நடைபெறவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் சாரா அவர்கள், ஆப்ரிக்காவில் குடும்பத்தை அழிக்கும் நோக்கத்தில், குடும்பத்தின் புனிதத்தன்மை பல கருத்தியல்களால் தாக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.

திருமணம் குறித்த திருஅவையின் போதனைகளை வலியுறுத்த அஞ்ச வேண்டாம் எனவும் ஆயர்களைக் கேட்டுக்கொண்ட கர்தினால் சாரா அவர்கள், குடும்பம் குறித்த நேர்மறை விழுமியங்கள் ஊக்குவிக்கப்படுவதற்கு இடையூறாய் நிற்கும் தேசிய மற்றும்  பன்னாட்டுக் கொள்கைகளுக்கு எதிராய்க் குரல் எழுப்புமாறும் கூறினார்.

குடும்பம் குறித்த உலக ஆயர் மாமன்றம், வருகிற அக்டோபர் 4 முதல் 25ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.