2015-06-11 16:15:00

திருத்தந்தை : மீட்புப்பணிகள் அனைத்தும் இலவசமானதே


ஜூன்,11,2015. செல்வத்தின் வழியே மீட்படையலாம் என்ற தப்பெண்ணத்தை வீசியெறிந்தவர்களாய், நன்னெறியில் நடைபயின்று, பிறருக்குப் பணியாற்றி, நற்செய்தியை இலவசமாக வழங்குபவர்களாக கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழன் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை அறிவிக்க இயேசு தன் சீடர்களை அனுப்பியது பற்றிய இன்றைய திருப்பலி வாசகத்தை மையப்படுத்தி, உள்மன பயணம் என்பது நற்செய்தியை அறிவிக்க உதவுகின்றது என்று எடுத்துரைத்தார்.

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் தாங்கள் பெற்றதை பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வரவில்லையெனில், அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாது, மற்றும் தங்களிடமிருக்கும் நல்லதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள மறுப்பவர் ஆகின்றார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வேறு இடங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவிக்க தயாரிக்கும் விதமாக, முதலில் உள்மன பயணம் தேவைப்படுகின்றது, அதற்கு செபமும், தியான வாழ்வும் இன்றியமையாதவை என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, நற்செய்தியை எடுத்துச் செல்பவர், உறுதியுடையவராக இருப்பதற்கு இதுவே உதவுகின்றது என்றார்.

மற்றவர்களுக்குச் சேவை செய்யாத வாழ்வு கிறிஸ்தவ வாழ்வாக இருக்கமுடியாது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நம் கிறிஸ்தவக் கடமைகளுள், உதவித் தேவைப்படுபவர்களுக்கு ஆற்றும் சேவையும் உள்ளடங்கும் என்றார்.

இலவசமாகப் பெற்றதை இலவசமாகவே வழங்கும்படி இயேசு எதிர்பார்ப்பதை மனதில்கொண்டு, நம் அனைத்து சேவைகளும் இலவசமானதாகவே இருக்கவேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், "எங்கு வேலையில்லையோ, அங்கு மாண்பும் இல்லை" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.