2015-06-11 11:32:00

கடுகு சிறுத்தாலும் – எளியோர் பணி இறைவன் பணி


கொல்கத்தாவில் நிர்மல் ஹிர்தய் (நிர்மலமான நெஞ்சம்) இல்லம் செயல்படத் துவங்கிய காலத்திலேயே அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளையோர் ஒன்றுசேர்ந்து, உயிர் பிரிந்து கொண்டிருக்கும் வேளையில் அப்பாவி ஏழைகளை ஒரு வெளிநாட்டுப் பெண்மணி, கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றுகிறார், அவரை உடனே நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுத்தனர். நிலைமையை நேரில் பார்க்காமல் தான் நடவடிக்கை எதுவும் எடுக்க இயலாது என்று கூறினார் காவல்துறை உயர் அதிகாரி. பின்னர் நிர்மல் ஹிர்தய் இல்லத்தைப் பார்வையிட நேரில் சென்றார் அவர். அங்கே, தொழுநோய் முற்றிய நிலையில் அழுகி வடிந்துகொண்டிருந்த ஒருவரின் புண்ணை Potassium permanganate கரைசலைப் போட்டு அன்னை தெரேசா துடைத்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் ஒரே மருந்து நாற்றம். காவல்துறை அதிகாரி வந்த நோக்கத்தை அறியாத அன்னை தெரேசா, ‘கொஞ்சம் இருங்கள், நான் வந்து எல்லா இடத்தையும் சுற்றிக் காட்டுகிறேன்’ என்றார். அதற்குள் இல்லம் முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டார் அந்த அதிகாரி. திரும்பி வந்த அவர் புகார் கூறிய இளையோரிடம், “நான் கொடுத்த வாக்குறுதியின்படி அன்னையை வெளியேற்றி விடுகிறேன். ஆனால் அவர் இங்கே செய்துகொண்டிருக்கும் பணியினை உங்கள் அன்னையர் வந்து செய்ய வேண்டும், சம்மதமா?” என்று கேட்டார். குறை கூறிய இளையோர் வாய் திறக்கவில்லை. பின்னர் அந்த அதிகாரி, “இந்தக் கட்டடத்தின் பின்புறம் காளியின் சிலை இருக்கிறது. ஆனால் இங்கே உயிருள்ள காளியம்மாவை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.