2015-06-10 16:59:00

முதுபெரும் தந்தையர் ஐவரும் வெளியிட்டுள்ள அறிக்கை


ஜூன்,10,2015 சிரியா நாட்டைவிட்டு வெளியேறும் கிறிஸ்தவர்களை நாங்கள் கண்டனம் செய்யவில்லை; அதேவேளையில், கிறிஸ்தவராய் வாழ்வதென்பது, பெரும் துன்பங்களை எதிர் கொள்வதற்குத் தரப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று, அந்தியோக்கு கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையர் ஐவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மெல்கத்திய கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை, 3ம் கிரகரி லஹாம், மாரனைட் முதுபெரும் தந்தை, கர்தினால் பெக்காரா புத்ரோஸ் ராஹி, சிரியக் கத்தோலிக்க முதுபெரும் தந்தை, 3ம் இக்னேசியஸ் யுனான், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, யோவான் யாஸிகி, மற்றும் சிரியக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, இரண்டாம் இக்னேசியஸ் ஆப்ரேம் ஆகிய ஐவரும் சிரியாவின் தமஸ்கு நகரில் கூடிவந்தபோது, இவ்வறிக்கையை வெளியிட்டனர்.

பொதுவாக, முதுபெரும் தந்தையரின் ஆண்டுக் கூட்டம் லெபனானில் நடைபெறும் என்றும், இவ்வாண்டு, தமஸ்கு நகர் கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையி, இக்கூட்டம் அந்நகரில் நடத்தப்பட்டது என்றும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

பன்னாட்டு அரசுகளின் ஆக்கப்பூர்வமான தலையீடு, மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமை ஆகிய இரு கருத்துக்களும், முதுபெரும் தந்தையரின் கூட்டத்தில் சிறப்பாக விவாதிக்கப்பட்டன என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.