2015-06-10 16:55:00

மதச் சுதந்திரமும், பன்முகக் கலாச்சாரமும் குடியரசின் அடிப்படை


ஜூன்,10,2015 உண்மையான மதிப்புடனும், திறந்த மனதுடனும் மதப் பாரம்பரியங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் சந்திப்புக்கள், சமுதாயத்திற்கும், அரசியல் உலகிற்கும் நன்மை பயக்கும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

போஸ்னியா-ஹெர்சகொவினா நாட்டின் தலைநகர் சரயேவோவில் இத்திங்களன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் சரயேவோவில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு சமய, கலாச்சார கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 'அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்' என்ற தலைப்பில், பேராயர் காலகர் அவர்கள் உரையாற்றினார்.

மனித இயல்பைக் குறித்து, பழம்பெரும் மதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில்தான் மனிதக் கலாச்சாரம் வளர்ந்துள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது என்று பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.

உலகின் குடியரசுகள் நலமாக இயங்குவதற்கு, மதச் சுதந்திரமும், பன்முகக் கலாச்சாரமும் அடிப்படையான அம்சங்கள் என்பதை, பேராயர் காலகர் அவர்களின் உரை வலியுறுத்தியது.

ஆதாரம் : VIS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.