2015-06-10 16:49:00

திருப்பீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் ஒப்பந்தம்


ஜூன்,10,2015 திருப்பீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் அரசு சார்ந்த ஓர் ஒப்பந்தம் முதன்முறையாகக் கையெழுத்திடப்பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'வரி ஏய்ப்பு விடயங்களுக்கு எதிராக போராடுதல்' என்ற கருத்தில், திருபீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தம் குறித்து, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் (Paul Richard Gallagher) அவர்கள் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

கடந்த ஐந்தாண்டளவாக, பண விடயங்களில் வெளிப்படையான, நேர்மையான வழிகளை உறுதிசெய்ய, திருப்பீடமும், வத்திக்கான் அரசும் முயன்று வருகின்றன என்று குறிப்பிட்ட பேராயர் காலகர் அவர்கள், தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள இவ்வொப்பந்தம் இம்முயற்சிகளை மீண்டும் உறுதி செய்வதாக அமையும் என்று கூறினார்.

அயல்நாட்டுக் கணக்கு வழக்குகளில், வரி ஏய்ப்பு முயற்சிகள் இடம்பெறாவண்ணம், திருப்பீடமும், அமெரிக்க ஐக்கிய நாடும் செய்துள்ள இவ்வொப்பந்தம், இவ்விரு நாடுகளின் அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி.

இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில், திருப்பீடத்தின் சார்பில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு சார்பில், அமெரிக்க அரசின் திருப்பீடத் தூதர், கென்னெத் ஹெக்கெட் (Kenneth F. Hackett) அவர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.