2015-06-10 16:44:00

அடிப்படை மருந்துகள் 3ல் ஒரு பகுதியினருக்குக் கிடைப்பதில்லை


ஜூன்,10,2015 தேவையான, அடிப்படை மருந்துகளும், தடுப்பூசிகளும் உலக மக்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்குக் கிடைப்பதில்லை என்று ஐ.நா.நலவாழ்வு நிறுவனமான WHO கூறுவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், உலக வர்த்தக நிறுவனமான WTO, ஜெனீவாவில், ஜூன் 10, இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள், வறுமை, கல்வியறிவின்மை, குழந்தைகள் மரணம் என்ற மூன்று விடயங்களில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

மில்லென்னிய இலக்குகள் நோக்கி இவ்வுலகம் நடைபயின்றாலும், வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் உதவிகள் இன்னும் தீவிரமடையாவிடில், அந்நாடுகள் மில்லென்னிய இலக்குகளை அடைவது கடினம் என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.